சினிமாவில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருப்பவரின் முகம் நமக்கு தெரிந்தாலும் அவரது பெயர் நம் நினைவில் இருக்காது. அந்த அளவுக்கு தமிழ் படங்களில் பார்த்து பார்த்து பழகி அதிகம் பேருக்கு பேர் தெரியாத பிரபல நடிகர் என நிச்சயம் அஜய்யை கைகாட்டி விடலாம். பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் அஜய் ரத்னம், ’நாளைய மனிதன்’ என்ற திரைப்படத்தில் கடந்த 1980 ஆம் ஆண்டு அறிமுகமானார்.
இந்த படத்திற்கு ஒரு உயரமான மனிதர் தேவை என்று இயக்குனர் வேலு பிரபாகரன் தேடிக் கொண்ட நிலையில் தான் அவரது கண்ணில் பட்ட அஜய் உடனடியாக அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படம் வெளியான போது அவரது திரில் நடிப்பை கண்டு அனைவரும் அசந்து போயினர்.
இதில் நடித்த போது அவர் வீட்டில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக சொல்லவே இல்லை. கிட்டத்தட்ட பாதி படம் முடிந்தவுடன் தான் அவரது அம்மா கண்டுபிடித்ததாகவும் அதன் பிறகு உண்மையை கூறியதாகவும் பேட்டி ஒன்றில் அஜய் கூறி இருந்தார்.
முதல் படமே வித்தியாசமான கேரக்டர் கிடைத்ததையடுத்து அவருக்கு அடுத்தடுத்து வில்லன் வேடங்கள் கிடைத்தன. திருப்புமுனை, அதிசய மனிதன், குணா, தர்மதுரை, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அவர் பிஸியான நடிகராக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான ’ராவண சூரா’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் முதலமைச்சர் கதாபாத்திரத்திலும் அவர் நடித்திருந்தார்.
அஜய் ரத்னம், கமல்ஹாசனுக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்துள்ளார். தான் வெறும் கல்லாக இருந்ததாகவும் கமல்ஹாசன் தான் தன்னை வைரமாக செதுக்கியதாகவும் பல பேட்டிகளில் கூறியுள்ளார். நடிகராக மட்டுமின்றி அவர் ஞாபக சக்தி திறனை மாணவர்களுக்கு வளர்க்கும் ஒரு பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். ஒருமுறை தனது மகனுக்கு ஞாபக பயிற்சி திறனை அவரது ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை கேட்டு மற்ற மாணவர்களுக்கும் இதை செய்யலாமே என்ற எண்ணத்தில் தான் இந்த பயிற்சியை தொடங்கியதாக அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டில் இருப்பது போல் தற்போது இந்தியாவில் இன்னும் ஞாபகசக்தி கவுன்சிலிங் பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும் எதிர்காலத்தில் கண்டிப்பாக இந்த கவுன்சிலிங் ஒரு முக்கியத்துவம் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திரையுலகில் மட்டுமின்றி சின்னத்திரை உலகிலும் அவர் பெரிய அளவில் சாதித்துள்ளார். கடந்த 1997 ஆம் ஆண்டு ரகசியம் என்ற தொடரில் காவல்துறை அதிகாரியாக நடித்த அஜய், அதன் பிறகு விடாது கருப்பு, அண்ணாமலை, பெண், கோகுலத்தில் சீதை, சுந்தரவல்லி, சிவசங்கரி உட்பட பல தொடர்களில் நடித்துள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான திருடா திருடா திரைப்படத்தில் அஜய் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். அதேபோல் ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன், காதலன் ஆகிய படங்களிலும் ரஜினியுடன் வீரா படத்திலும், இதே போல அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்திலும் அஜய் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.