இளையாராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் என தமிழ் சினிமாவில் ராஜ்ஜியம் நடத்தி வரும் இசையமைப்பாளர்கள் அதிகம். இதற்கு மத்தியில் பல இசையமைப்பாளர்கள் தங்களுக்கு கிடைத்த குறுகிய காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தையும் உண்டு பண்ணியவர்களும் உள்ளனர். அதில் மிக முக்கியமானவர் தான் எஸ்.ஏ. ராஜ்குமார்.
மெலடி பாடல்களின் மன்னன் என பெயர் எடுத்த எஸ். ஏ. ராஜகுமாரின் தந்தை புல்லாங்குழல் கலைஞர். இவர் இளையராஜா, கங்கை அமரன், தேவா உள்ளிட்டவர்களிடம் பணிபுரிந்துள்ளார். தந்தையை போலவே தானும் இசை துறையில் சாதனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்த எஸ்ஏ ராஜ்குமார், இசைக்கலையை முறைப்படி கற்றார். அதன் பிறகு தந்தையின் ஆசியுடன் அவர் ஒரு இசை குழுவை ஆரம்பித்தார்.
இந்த நிலையில் தான் இரட்டையர்கள் ராபர்ட் ராஜசேகர் கண்களில் அவர் பட்டார். அது முதல் அவருக்கு ஒரே ஏற்றம் தான். ராபர்ட் ராஜசேகர் இயக்கத்தில் உருவான ’சின்ன பூவே மெல்ல பேசு’ என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தார். அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.
இதனை அடுத்து அவர் வீரன் வேலு தம்பி, தங்கச்சி, குங்குமப்பொட்டு, ரயிலுக்கு நேரமாச்சு, மனசுக்குள் மத்தாப்பு போன்ற படங்களில் இசையமைத்த எஸ்ஏ ராஜ்குமாருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது விக்ரமன் இயக்கிய முதல் படமான ’புது வசந்தம்’ திரைப்படம் தான். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியதையடுத்து விக்ரமன் கிட்டத்தட்ட தனது அனைத்து படங்களுக்கும் எஸ்ஏ ராஜ்குமாரை தான் இசையமைப்பாளராக பயன்படுத்தினார்.
அவரது இயக்கத்தில் உருவான ’நான் பேச நினைப்பதெல்லாம்’ ’பூவே உனக்காக’ ’சூரிய வம்சம்’ ’உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ ’வானத்தைப்போல’ போன்ற பல படங்களுக்கு அவர் இசையமைத்தார். இதனையடுத்து அவர் பிற முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்ததுடன் தமிழில் 100 படங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களுக்கும் இசையமைத்துள்ளார் எஸ். ஏ. ராஜ்குமார். மேலும் சில தொலைக்காட்சி தொடருக்கும் இசையமைத்துள்ள அவர் பாடல்களையும் பாடியுள்ளார். தமிழ் திரையுலகில் காலத்தால் அழியாத பல மெலடி பாடல்களை இவர் இசையமைத்துள்ளதால் மெலடி பாடல்களின் மன்னர் என்று ரசிகர்களால் அன்புடன் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.