விக்ரமுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த படம்… தயாரித்த விஏ துரையின் இறுதிகால வறுமை..!

By Bala Siva

Published:

தமிழ் திரை உலகின் தயாரிப்பாளர்களில் ஒருவரான விஏ துரை நேற்று இரவு தனது வீட்டில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 69.

தயாரிப்பாளர் விஏ துரை கடந்த சில மாதங்களாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு கட்டத்தில் சிகிச்சைக்கு பணம் இல்லை என்ற நிலையில் ரஜினிகாந்த அவருக்கு உதவி செய்ததாகவும் மருத்துவமனை சிகிச்சை செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி வீடியோ கால் மூலம் விஏ துரை அவர்களிடம் பேசிய ரஜினிகாந்த் தைரியமாக இருங்கள் என்றும் கடவுள் கண்டிப்பாக உங்களை குணமாக்குவார் என்றும் ஆறுதல் கூறியிருந்தார்.

அதேபோல் நடிகர் சூர்யா 2 லட்சம் பண உதவி செய்தார். வேறு சில நட்சத்திரங்களும் அவருக்கு உதவி செய்தனர். இந்த நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஏ துரை நேற்று இரவு காலமானார். இதனை அடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆரம்ப காலத்தில் பிரபல தயாரிப்பாளர் ஏஎம் ரத்தினம் அவர்களிடம் தயாரிப்பு நிர்வாகியாக விஏ துரை பணிபுரிந்தார். அதன் பிறகு சொந்தமாக எவர்க்ரீன் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சத்யராஜ் நடித்த என்னம்மா கண்ணு, லூட்டி, விக்ரம் நடித்த பிதாமகன் உள்பட சில படங்களை தயாரித்தார்.

விஏ துரை தயாரித்த பிதாமகன் திரைப்படத்தை பாலா இயக்கியிருந்தார். இந்த படத்திற்குதான் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் விஜயகாந்த் நடித்த கஜேந்திரா உள்ளிட்ட சில படங்களை தயாரித்தார். ஆனால் அந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் அவர் முதலீடு செய்த பணத்தை இழந்தார்.

பிரபல இயக்குனர் எஸ் பி முத்துராமனிடம் 25 ஆண்டுகளாக உதவி இயக்குனராகவும், ரஜினிகாந்த் நடித்த சுமார் 25 படங்களில் உதவி இயக்குனராகவும் இணை இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். அப்போது இருந்தே ரஜினிகாந்த் அவர்களுடன் நெருங்கிய நட்பில் விஏ துரை இருந்தார். அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பரான விஏ துரை அவர் தயாரித்து நடித்த பாபா என்ற திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்தார்.

தமிழ் திரை உலகில் தயாரிப்பு துறையில்  சிறந்த அனுபவத்தை பெற்றிருந்த விஏ துரை கடைசி காலங்களில் மிகவும் கஷ்டப்பட்டார். ஒரு கட்டத்தில் அவர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட நிலையில்தான் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலகினர் அவருக்கு உதவி செய்தனர்.

இந்த நிலையில் விஏ துரை அவர்கள் மறைந்ததை அடுத்து, திரையுலகினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அவரது இறுதி சடங்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.