Ravali: தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட தென்னிந்திய மொழிகளில் நடித்தவர் நடிகை ரவளி. இவர் ஒரு திரைப்படத்தில் நடித்த போது தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்க மறுத்ததை அடுத்து அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் புகார் அளித்து தன்னுடைய சம்பளத்தை பெற்றதாக கூறப்படுகிறது.
விஜயகாந்த் உடன் நடிகை ரவளி, ‘திருமூர்த்தி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்ததால் அந்த நட்பின் மூலம் அவர் தனது சம்பளத்தை திரும்ப பெற்றதாக கூறப்பட்டது. ஒரு தமிழ் படத்தில் நடித்தபோது, அந்த படத்தின் தயாரிப்பாளர் ரவளிக்கு சம்பளம் கொடுக்காமல் இருந்ததாகவும், விஜயகாந்த் தலையிட்டு ரவளிக்கு சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்ததாகவும் கூறப்பட்டது.
நடிகை ரவளி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே நடிப்பின் மீது நாட்டம் கொண்ட அவர் நடனம், நாட்டியம் ஆகியவற்றை முறையாக பயின்றார். 1990-ம் ஆண்டு ‘ஜட்ஜ்மெண்ட்’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார். இருப்பினும் அவர் பிரபலமானது தெலுங்கு திரையுலகில் தான். தமிழில் ‘பட்டத்து ராணி’ என்ற திரைப்படத்தில் அவர் சாந்தி என்ற கேரக்டரில் நடித்தாலும் அந்த படத்தில் அவர் பெரிய அளவில் ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை.
ஆனால் விஜயகாந்த் நடித்த ‘திருமூர்த்தி’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தான் அவர் தமிழ் திரை உலகில் பிரபலமானார். பவித்ரன் இயக்கத்தில் உருவான இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவானது. இந்த படத்தில் ரவளி, உமா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
‘திருமூர்த்தி’ படத்தை அடுத்து மீண்டும் விஜயகாந்துடன் ‘காந்தி பிறந்த மண்’ என்ற படத்தில் நடித்தார். ரேவதி நாயகியாகவும் ரவளி இரண்டாவது நாயகியாகவும் நடித்திருந்தனர். இந்த படத்தை ஆர்.சுந்தர்ராஜன் இயக்கியிருந்தார். விஜயகாந்த் உடன் இரண்டு படங்களில் நடித்ததை அடுத்து அவர் மீண்டும் தெலுங்கு பக்கம் போனார்.
தெலுங்கில் பல படங்கள் நடித்த நிலையில் அவர் சத்யராஜ் நடித்த ‘பெரிய மனுஷன்’ என்ற திரைப்படத்திற்காக மீண்டும் தமிழுக்கு வந்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனை அடுத்து பார்த்திபன் நடித்த ‘அபிமன்யு’ என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவரது கேரக்டர் நன்றாக பேசப்பட்டது.
அதன் பின்னர் அவர் ‘புத்தம் புது பூவே’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்த பிறகு மீண்டும் தெலுங்கு பக்கம் போன நடிகை ரவளி, நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘மறவாதே கண்மணியே’ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு திரும்பினார். இந்த படத்தின் நாயகனாக வினீத் நடித்த நிலையில், ரவளி கேரக்டருக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை. அதன் பின்னர் ‘கரிசக்காட்டு பூவே’ என்ற திரைப்படத்தில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் நடித்தார். நெப்போலியன், குஷ்பூ நடித்த இந்த திரைப்படத்தில் ரவளிக்கு, நாகமணி என்ற நடிப்புக்கு தீனி போடும் வேடம் கிடைத்தது.
இதனையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘உன்னை கண் தேடுதே’ என்ற படத்தில் நடித்தார். சத்யராஜ் நடித்த இந்த படத்தில் குஷ்பு நாயகியாகவும், ரவளி இரண்டாவது நாயகியாக நடித்திருந்தனர். அதன் பின்னர் ‘படைவீட்டு அம்மன்’, ‘அன்பு தோழி’ ஆகிய தமிழ் படங்களில் நடித்த நிலையில் மீண்டும் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அவர் தமிழ் திரையுலக பக்கமே வரவில்லை. ஆனால் தெலுங்கில் அவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் தான் அவருக்கு கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நீலி கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு 2008 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் 2018 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர்.
2011-ம் ஆண்டுக்கு பின்னர் தெலுங்கிலும் அவர் நடிப்பதை நிறுத்தி விட்டு தனது கணவர் மற்றும் குழந்தைகளை கவனிப்பதில் அவர் முழு ஈடுபாட்டில் இருந்தார். அதன் பிறகு கூட அவருக்கு ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அவர் நடிப்பதை விரும்பவில்லை என்று கூறப்பட்டது.