பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க் முடிவடைந்துள்ள நிலையில் வார இறுதியில் இந்த முறை இரண்டு பேர் எலிமினேட் ஆவார்கள் என்றும் முதலிலேயே தகவல்கள் வெளியாகி வந்தது. அந்த வகையில் சனிக்கிழமை எபிசோடில் முதல் ஆளாக ஜெஃப்ரி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக விஜய் சேதுபதி அறிவித்திருந்தார்.
ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டின் முதல் நாளில் அனைத்து போட்டியாளர்களும் நுழைந்த போது ஜெஃப்ரியை தவிர மற்ற அனைவருமே மக்கள் மத்தியில் அதிக பெயர் எடுத்தவர்கள் தான். சீரியல், சமூக வலைத்தளம் என மற்ற அனைத்து போட்டியாளர்களும் ஓரளவுக்காவது பிரபலம் ஆனவர்கள். இவர்களுக்கு மத்தியில் அதிக அறிமுகம் இல்லாத ஜெஃப்ரி மக்கள் மத்தியில் ஆதரவை பெறுவதும் சற்று சவாலான விஷயமாகவே இருந்தது.
ஜெஃப்ரியின் கேம் ஸ்பிரிட்
ஆனால், உள்ளே இருப்பவர்கள் தன்னை விட பெயர் எடுத்தவர்கள் என்ற எந்த சிந்தனையும் இல்லாமல் சக போட்டியாளராக பார்த்த ஜெஃப்ரி, யார் என்ன தவறு செய்தாலும் பின்னால் நின்று பேசாமல் முகத்திற்கு நேராக துணிச்சலுடன் பேசி வந்ததே மக்கள் மத்தியில் அவர் மீது கவனம் உருவாக காரணமாக அமைந்து விட்டது.
அத்துடன் பெரும்பாலான போட்டியாளர்களை விட வயதும் குறைவாக இருந்த ஜெஃப்ரி மீது பலருக்கும் அதிக அன்பும் பாசமும் கூட அதிகமாக இருந்தது. மேலும் இறுதி சுற்று வரை பிக் பாஸ் வீட்டில் ஜெப்ரி இருந்து விடுவார் என்று தான் அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால், திடீரென ஜெஃப்ரி எலிமினேட் ஆனது பார்வையாளர்கள் மற்றும் பிக் பாஸ் வீட்டில் இருந்த பலருக்கும் கூட பேரதிர்ச்சியாக தான் அமைந்திருந்தது.
விஜய் சேதுபதி அதிகம் நேசித்த போட்டியாளர்களில் ஒருவரான ஜெஃப்ரி வெளியேறிய சமயத்தில் மிக ஜாலியாக கண்ணீர் சிந்தாமல் இது விளையாட்டின் ஒரு பகுதி என்று தான் கூறிவிட்டு சென்றார். அப்படி இருக்கையில், விஜய் சேதுபதி ஜெஃப்ரிக்கு கொடுத்த அட்வைஸ் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.
அவங்க சொல்றத மட்டும் கேளு
“நான் ஒரே ஒரு விஷயம் தான் சொல்ல விரும்புறேன். உங்க அம்மா பேச்சை கேளு. அவங்க ரொம்ப ஆழமா சிறப்பா பேசுனாங்க. பல இடங்கள்ல திசை தெரியாம நிக்குறப்போ வீட்டுல அப்பா, அம்மா பேசுனா வார்த்தைகள் வெளிச்சமா வந்து நிக்கும். நான் கொஞ்ச நேரம் தான் உன் அம்மா பேசுனதை கேட்டேன். அதுலயே உன்னோட இந்த லெவலுக்கு காரணம் அவங்க தான்னு தெரிஞ்சுது.
அது மாதிரி அவங்க ரொம்ப முதிர்ச்சியா, அழகா பேசுனாங்க. அவங்க சொல்றத கேளு. அத மட்டும் தான் நான் சொல்ல விரும்புறேன். உன் வாழ்க்கை சிறப்பா அமையும். அதுல எந்த சந்தேகமும் எனக்கு இல்ல. நீயும் சந்தேகப்படாத” என்றும் அறிவுறுத்துகிறார்.