விஜய் ரசிகர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அம்பேத்கர் மற்றும் தீரன் சின்னமலை பிறந்தநாளின் போது அவர்களுடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் கவிஞர் பாரதிதாசனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டதை அடுத்து விஜய் ரசிகர்கள் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தளபதி விஜய் இன்னும் ஒரு சில வருடங்களில் அரசியலில் குதிப்பார் என்றும் அவரது விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக உருவாகும் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக மறைந்த அரசியல் தலைவர்களின் பிறந்தநாளின் போது அவர்களுடைய சிலைக்கு மாலை அணிவிக்க விஜய் தரப்பிலிருந்து ரகசியமாக உத்தரவிட்டதாகவும் அதை விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் செயல்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.
எனவேதான் ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் சிலைக்கும் அதன் பிறகு தீரன் சின்னமலை சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். திடீரென அரசியல் பிரபலங்களின் சிலைக்கு மாலை அணிவிக்கும் விஜய் ரசிகர்களின் செயல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டதை அடுத்து அவருடைய சிலைக்கும் விஜய் ரசிகர் மன்றத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதனை அடுத்து விஜய் 2026 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் அவர் தமிழக அரசியலுக்கு வருவாரா? அல்லது புதுச்சேரி அரசியலுக்கு வருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் அடுத்த தேர்தலில் முதலமைச்சர் ரங்கசாமி உடன் கூட்டணி அமைத்து விஜய் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்றும் ஒரு வதந்தி பரவி வருகிறது. எது எப்படியோ 2026 ஆம் ஆண்டு விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.