சென்னை : சென்னை மீனம்பாக்கத்தில் இன்று நடைபெற இருந்த விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சிக்கு திடீரென போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதன் காரணமாக நிகழ்ச்சி வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள விஜய் ஆண்டனி, கடைசி நேரத்தில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள AM ஜெயின் கல்லூரி மைதானத்தில்,இன்று “Vijay Antony 3.0 -இன்னிசை கச்சேரி” நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. மேலும் போலீசாரிடம் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரப்பட்டது. நிகழ்ச்சி கிட்டத்தட்ட நடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு நிறுவனமான Noise and Grains Private Limited உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக ஏற்பாடும் செய்திருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் போலீசார் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டனர். சென்னையில் தற்போது உள்ள சூழல்களை கருத்தில் கொண்டும், குடியிருப்பு பகுதியில் 20 ஆயிரம் பேர் கூடினால் பாதிப்புகள் ஏற்படும் என்றும், உரிய வசதிகள் செய் முடியாது என்றும் கூறி காவல்துறை சார்பில் அனுமதி மறுத்துள்ளது.
இதனால் இன்று நடைபெற இருந்த விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி இன்னொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் “Vijay Antony 3.0 -இன்னிசை கச்சேரி” நிகழ்ச்சி வேறு எந்த தேதியில் நடைபெறும் என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை. அதேநேரம் கடைசி நேரத்தில் போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்காக விஜய் ஆண்டனி வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் விஜய் ஆண்டனி கூறுகையில், ‛‛சில எதிர்பாராத காரணங்களினாலும் மற்றும் தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும் அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இன்று நடைபெற இருந்த விஜய் ஆண்டனி 3.0 லைவ் கான்செர்ட் வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.