ஹீரோ மீசையைப் பார்த்து வைரமுத்து எழுதிய பாட்டு.. அண்ணன் தங்கை பாட்டுல இப்படி ஒரு வரியா?

By John A

Published:

கவிஞர்களின் கற்பனைத்திறனுக்கு எல்லையே கிடையாது. சாதரணமாக நாம் பார்க்கும் ஒரு பொருளைக் கூட கவித்துவம் வாய்ந்த வரிகளில் எழுதி அதை சிறப்பாக்குவதில் வல்லவர்கள். மேலும் காதல், இயற்கை, சமூகம், உறவுகள், என அனைத்திலும் தங்களுக்குத் தோன்றியதை எழுதி அதை வாசகர்களிடம் சேர்த்து புதுமை படைப்பார்கள். தமிழ் சினிமாவை பொறுத்தவரை கண்ணதாசன் காலம் தொட்டு இன்றைய கவிஞர்கள் வரை பல ஆயிரம் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த பொக்கிஷ கவிஞர்தான் கவிப்பேரரசு வைரமுத்து.

‘நிழல்கள்’ படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து இன்றுவரை தனது பேனா முனையால் எண்ணத்தில் உதித்த வரிகளை கவிதையாகவும், பாடலாகவும் வடித்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். இவருக்கும் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கும் இருக்கும் உறவு என்பது மண் சார்ந்த உணர்வு. பாரதிராஜா தனது பெரும்பாலான படங்களில் வைரமுத்துவையே பாடல்களுக்கு பயன்படுத்தியிருப்பார். இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா காம்போ கொடுத்த ஹிட்ஸ் எல்லாமே எவர்க்ரீன் பாடல்களாக இருக்கின்றன.

ஆயிரம் சூரியன் முன்னால் வந்து நின்ன மாதிரி.. எம்ஜிஆரை முதன் முதலாக பார்த்த கன்னடத்து பைங்கிளியின் அனுபவம்

ஒருகட்டத்தில் இளையராஜாவிடமிருந்து பிரிந்து பாரதிராஜா முதன்முதலில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்தார். இவர்கள் கூட்டணியில் வந்த படம் தான் ‘கிழக்கு சீமையிலே’. பாரதிராஜாவின் அக்மார்க் கிராமத்து படமாக வெளிவந்த கிழக்கு சீமையிலே படம் பாச மலர், முள்ளும் மலரும் வரிசையில் இணைந்தது. இந்த படத்திற்கான அனைத்து பாடல்களையும் வைரமுத்துவே எழுதியிருந்தார். இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் ஆகிய நிலையில் குறிப்பாக ‘கத்தாழங் காட்டுவழி..’ பாடல் பாசமாய் வளர்த்த தங்கை திருமணம் முடித்து புகுந்த வீடு செல்லும் போது அண்ணன், தங்கையின் உணர்வுகள் எப்படி இருக்கும் வரிகளில் என்பதை அற்புதமாக எடுத்துக் காட்டியிருப்பார் வைரமுத்து.

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

என்று ஆரம்பிக்கும் இந்த பாடலில் குறிப்பாக இடம்பெற்ற ஒரு வரியானது ஒட்டுமொத்த பாடலுக்கும் அர்த்தம் சொன்னதாக அமைந்திருக்கும்.

அணில்வால் மீசை கொண்ட அண்ணே ஒன்ன விட்டு
புலிவால் மீசை கொண்ட புருஷனோட போய்வரவா

என்ற வரிகள் எழுதும் போது ஹீரோவான விஜய்குமாரையும், வில்லன் நெப்போலியனையும் பார்த்துள்ளார். வில்லன் தோற்றத்தில் இருந்த அவரின் மீசையும், ஹீரோ விஜயகுமார் மீசையையும் வைத்து இந்த வரிகளை எழுதி பாட்டிலேயே ஒட்டுமொத்த படத்தின் கதையையும் சொல்லி இருப்பார் வைரமுத்து. இப்படி குறிப்பால் உணர்த்தி எழுத அதற்கு ஜானகியும், ஜெயச்சந்திரனும் பின்னணி பாடி மேலும் உணர்வை கூறியிருப்பர். இந்தப் பாடலுக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த பின்னணி பாடகருக்கான விருது ஜெயச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது.