தமிழ் சினிமாவில் நாகேஷ், கவுண்டமணி, செந்திலுக்கு அடுத்த படியாக ‘என் ராசாவின் மனசிலே’ படம் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் மக்கள் எல்லோர் மனதிலும் தனது காமெடியால் நீக்கமற நிறைந்தவர் தான் வடிவேலு. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் காதலன் படத்தில் பிரபலமானார். தொடர்ந்து வாய்ப்புகள் குவிய ஹீரோக்களுக்கு இணையாக வலம் வந்தார். படத்தில் கதை இல்லை என்றாலும் இவரது காமெடி ட்ராக்குக்காகவே ஓடிய படங்கள் ஏராளம். ரஜினி, கமல் முதல் இன்றைய காலத்து இளம் நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்து இன்று மீம்ஸ்களிலும் கிங் ஆக வலம் வருகிறார் வடிவேலு.
வடிவேலு, விவேக் காம்போவில் பல படங்கள் வந்திருக்கின்றன. சிங்கிளாக நடித்தாலே வயிற்றை பதம் பார்ப்பவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்து ரசிகர்களுக்கு காமெடி விருந்து அளித்தனர். இவர்கள் கூட்டணியில் உருவான மனதை திருடிவிட்டாய், விரலுக்கேத்த வீக்கம், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, என் புருஷன் குழந்தை மாதிரி உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் காமெடி காட்சிகளால் திரையரங்கை அதிர வைத்தன. அதிலும் குறிப்பாக இவர்கள் இருவரும் இணைந்து நடித்த மிடில்கிளாஸ் மாதவன் பட காமெடி எவர்கிரீன் காமெடி வரிசையில் இணைந்துள்ளது.
2001 -ல் இயக்குனர் டி.பி. கஜேந்திரன் இயக்கத்தில் பிரபு, அபிராமி, வடிவேலு, விவேக், தாரணி, டெல்லி கணேஷ், ரேவதி அம்மாள் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் இன்று பார்த்தாலும் குலுங்கி சிரிக்க வைக்கும் காமெடி படமாக இருக்கும். படத்தில் வடிவேலுவின் லூட்டி ஒவ்வொன்றும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போடும் வசனங்களை அமைந்திருக்கும். குறிப்பாக வடிவேலு பாத்ரூமில் சுடு தண்ணீரை ஊற்றி பின்னால் பெரிய கட்டுப்போட்டு குப்பற படுத்து கிடக்கும் காட்சியைப் பார்த்து கண்களில் நீர் வர சிரிக்காதவர்கள் எவரும் இல்லை.
அப்போது அவர் பேசும் வசனங்களான ‘எரியுதுடி மாலா.. Fan-அ பனிரெண்டாம் நம்பர்ல வை..’ என்று அவரின் மனைவியாக நடித்த தாரணியைப் பார்த்து பேசும் வசனம் இன்றுவரை பிரபலமாக இருக்கிறது. இந்தக் காட்சியை எடுப்பதற்கு முன்னர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய டேக் வாங்கினார்களாம். ஏனெனில் அந்தக் காட்சியில் வடிவேலுவின் மேனரிசம் நடிப்பு ஆகியவற்றைக் கண்ட இதர நடிகர்கள் குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டே இருந்தார்களாம். மேலும் அவர் கட்டுடன் இடுப்பை தூக்கிக் காட்டும் போதும், நடக்கும் போதும் ஒட்டு மொத்த யூனிட்டே சிரிப்பலையில் அதிர்ந்திருக்கிறது.