டி.ராஜேந்தர் இயக்கத்தில் உருவான ‘உயிருள்ளவரை உஷா’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் கங்கா.
கடந்த 1983-ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கத்தில் கங்கா, நளினி நடிப்பில் உருவான திரைப்படம் உயிருள்ளவரை உஷா. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் கங்கா, நளினி காதல் ஜோடியை சேர்த்து வைக்கும் கேரக்டரில் டி.ராஜேந்தர் நடித்திருப்பார்.
டி.ராஜேந்தருக்கு ‘ஒரு தலை ராகம்’ படத்தை அடுத்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் என்றால் ‘உயிருள்ளவரை உஷா’ தான். இந்த படத்தில் இருந்து தான் அவர் எதுகை மோனை வசனங்களை பேச ஆரம்பித்தார்.
முதல் படமான ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து நடிகர் கங்காவுக்கு தமிழில் ஒரு சில வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக ‘எச்சில் இரவுகள்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். 1982-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை ஏ.எஸ்.பிரகாசம் என்பவர் இயக்கியிருந்தார். ரூபா, பிரதாப் போத்தன், ரவீந்தர், கங்கா, சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இதனையடுத்து ‘கரையை தொடாத அலைகள்’ என்ற படத்தில் அவர் நடித்தார். 1985-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை மாதவன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கங்காவுடன் அருண், இளவரசி, மனோரமா, விகே ராமசாமி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.
இந்த இரண்டு படமும் உயிர் உள்ளவரை உஷா அளவுக்கு ஓடவில்லை என்றாலும் சுமாரான வெற்றியை பெற்றது. டி.ராஜேந்தர் படத்தில் அறிமுகம், அதன் பின்னர் ஒரு சில தமிழ் படங்கள் மற்றும் மலையாள படங்களில் நடித்து தொலைக்காட்சி தொடர்களிலும் பிரபலமாக இருந்த நடிகர் கங்கா, இன்று (11-11-2023) காலை திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார்.
அவரது இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தில் நாளை நடைபெறும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் கங்காவின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.