தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டங்களில் வெளிவந்த படங்களில் மிக அதிக நாட்கள் ஓடி அதுவரை எந்தப் படமும் செய்யாத வசூல் சாதனையைப் புரிந்த படம் திரிசூலம். 1979-ல் கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கே.ஆர்.விஜயா, மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீபிரியா, நம்பியார் ஆகியோர் நடித்திருந்தனர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் இது 200வது படம்.தமிழ் சினிமாவில் திரிசூலம் படத்திற்கு முன்னர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படமே திரையில் மிக அதிக நாட்கள் ஓடி வசூல் சாதனைப் படமாக அமைந்தது.
ஆனால் இந்த ரெக்கார்டை எல்லாம் அடித்து துவம்சம் செய்தது திரிசூலம் திரைப்படம். இப்படத்திற்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி 200 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்த நிலையில் அப்போது ஒரு நிகழ்ச்சிக்கு அன்றைய தமிழக முதல்வர் எம்..ஜி.ஆர் அவர்களை அழைப்பதற்காக நடிகர் திலகம் கோட்டைக்கு சென்றிருக்கிறார்.
அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் “என்ன கணேசு! உன் 200வது படம் எப்படி போகுது” என்று கேட்க அதற்கு சிவாஜி “பரவாயில்லை! நல்லா போகுதுன்னு சொல்றாங்கண்ணே” என்று பதில் சொன்னாராம். “பரவாயில்லையா?” என்று கேட்டு உடனே அதிகாரிகளை அழைத்து ஒரு கோப்பை எடுத்து வரச் சொன்னாராம்.
நடிப்புக்கும் நமக்கும் செட் ஆகல.. முழுக்குப் போட்டு டாக்டராக மாறிய பிரபல காமெடியன் வாரிசு
சற்று நேரத்தில் ஒரு பைல் அவர் டேபிளுக்கு வந்தது. அதை திறந்து காட்டி விட்டு “இது கமர்ஷியல் டாக்ஸ் [வணிக வரி துறை] பைல். இதிலே உன் படம் எந்தெந்த ஊரிலே எவ்வளவு நாள் ஓடியிருக்கு எவ்வளவு வசூல் ஆயிருக்கு எல்லாம் இருக்கு. கவர்மென்ட்க்கு வரியா எவ்வளவு வருமானம் கிடைச்சிருக்குனு பார்த்தா இதுவரைக்கும் தமிழ் சினிமா மூலமா இவ்வளவு நாளிலே இவ்வளவு வருமானம் வேற எந்த படத்திற்கும் வந்ததில்லைன்னு எனக்கு நோட் போட்டு அனுப்பிச்சிருக்காங்க, நீ என்னடானா பரவாயில்லைனு சொல்றே என்று கேட்டாராம்“ எம்.ஜி.ஆர்.
ஆனால் சிவாஜிக்கு அந்த வசூல் விவரங்கள் தெரியாது என்பதை எம்.ஜி.ஆர் பிறகு தெரிந்துக் கொண்டாராம். தமிழ் திரைப்பட துறைக்கு அரசாங்கம் சில சலுகைகளை கொடுப்பதற்கு திரிசூலம் ஒரு காரணமாய் இருந்தது என்று சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் நிகழ்ச்சி ஒன்றில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.