அடுக்குமொழி வசனத்தால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்திருப்பவர் டி. ராஜேந்தர். ஒருதலை ராகம் படம் மூலமாக சினிமாவில் அடியெடுத்து வைத்த டி.ஆர். தன்னுடைய தமிழ் வளத்தால் சினிமாவில் முன்னணி இயக்குநர் மற்றும் கதாநாயகனாகத் திகழ்ந்தார். ஒரு படத்தை எடுத்தால் நடிப்பு, தயாரிப்பு, இசை, இயக்கம், கதை, வசனம் என்று இவர் பொறுப்பேற்கும் பட்டியல் நீளும். பெரும்பாலும் இதுபோலவே படங்களைக் கொடுத்தார்.
ராசியான 9 எழுத்து
டி.ஆர்-க்கு எப்போதும் 9 என்ற எண் ராசியானது போலும். தன்னுடைய பெரும்பாலான படங்களின் தலைப்பு 9 எழுத்தில் இருக்குமாறு வைத்தார். உயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம், என் தங்கை கல்யாணி, காதல் அழிவதில்லை, மோனிஷா என் மோனாலிஷா, நெஞ்சில் ஒரு ராகம், மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், சொன்னால்தான் காதலா என இவரது படங்களில் டைட்டில் எழுத்துக்கள் 9 எழுத்துக்களில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
விஜய்க்கு முன் இளைய தளபதி பட்டம் இவருக்குத்தான் இருந்துச்சா? யார் அந்த பிரபலம் தெரியுமா?
கிளைமேக்ஸ் ட்விஸ்ட்
ஏய் டண்டனக்கா, டணக்குடக்கா என இவர் நடித்த சண்டைக்காட்சிகள் வெகு பிரபலம். மேலும் இவரது படங்களில் பெரும்பாலும் இவர் இறந்து போவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். வேறு எந்த நடிகரும் தமிழ் சினிமாவில் இத்தனை படங்களில் இறப்பது போன்ற காட்சிகளில் நடித்ததில்லை.
நடிகர் திலகம் கூட சில படங்களில் மட்டுமே இத்தகைய காட்சிகளில் நடித்திருப்பார். ஆனால் டி.ஆர் விமர்சனங்களைப் பொருட்படுத்தாது காட்சி சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக அத்தகைய ரோல்களில் நடித்து ரசிகர்களின் அனுதாபத்தைப் பெற்றார். உணர்ச்சி ததும்ப இவர் பேசும் வசனங்களுக்கு சிறியவர் முதல் பெரியவர் ரசிக்காத ஆளே இல்லை எனலாம்.
2017-ல் மறைந்த இயக்குர் கே.வி. ஆனந்த் இயக்கிய கவண் படத்தில் மீண்டும் தன்னுடைய அடுக்குமொழியில் பாணியில் நடித்து பட்டையைக் கிளப்பியிருப்பார். மேலும் பல படங்களில் பிண்ணனி குரல் பாடி வருகிறார்.
சிம்புவின் ஒஸ்தி படத்தில் இடம்பெற்ற கலாசலா பாடலை எல்.ஆர். ஈஸ்வரியுடன் இணைந்து பாடியது இன்றும் இளைஞர்களை துள்ளிக் குதிக்க வைக்கும். தற்போது கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் அதிருதா பாடலைப் பாடி திரையரங்கையே அதிர வைத்திருப்பார்.