தமிழ்சினிமாவின் முதல் பேசும்படமாக காளிதாஸ் வந்தது. இது 1931ம் ஆண்டு எச்.எம்.ரெட்டி இயக்கத்தில் வெளியானது. ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றுப் பார்த்து ரசித்தனர்.
படத்தில் டி.பி.ராஜலட்சுமி, பி.ஜி.வெங்கடேசன், எல்.வி.பிரசாத் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த்திரை உலகின் முதல் லேடி சூப்பர்ஸ்டார், பெண் இயக்குனர் டி.பி.ராஜலெட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தான் ஹரிச்சந்திரா படத்தின் கதாநாயகி.
அப்போது சத்தமில்லாமல் தமிழ்சினிமா பல சாதனைகளைச் செய்தது. டெக்னாலஜியே இல்லாத காலகட்டத்தில் தான் மாயாபஜார் படம் எல்லாம் வந்து சக்கை போடு போட்டது.
ஆனால் இந்தக் காலத்தில் குறைந்த நாளில் ஒரு படத்தை எடுத்து முடிப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது. அதுவும் அவ்ளோ டெக்னாலஜியும் இருக்கிற இந்தக் காலத்தில் பெரிய சாதனையாகப் பார்க்கிறார்கள்.
24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் சுயம்வரம். இது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். ஒத்திகை பார்த்ததால் தான் இது சாத்தியமாயிற்று.
இப்போது 20 நாளில் படத்தை முடித்தாலும், ஒரு மாதத்தில் முடித்தாலும் அதை பெருமையாகப் பேசுவார்கள். ஆனால் 1932ம் ஆண்டு வெளிவந்த அதாவது 92 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது ஒரு படம். அதுதான் ஹரிச்சந்திரா. 21 நாளில் எடுக்கப்பட்ட படம்.
மேடை நாடகமாக நடத்தப்பட்டு வந்த ஹரிச்சந்திராவை சாகர் மூவி டோன் நிறுவனம் திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்தது. அப்போது நடிப்பதற்கு ஆள் இருந்தாலும், கேமராவை கையாள்வதற்கும், படத்தை இயக்குவதற்கும் வெளிநாட்டினர் தான் தேவைப்பட்டார்கள். அப்படி என்றால் எவ்வளவு செலவு செய்து கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்று பாருங்கள்.
அப்படி ஜெர்மன் நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட ஒருவர்தான் முதலில் ஹரிச்சந்திராவை இயக்கினார். பின்னர் அவர் பாதியிலேயே கிளம்பிவிட மீதி படத்தை ஹந்தி இயக்குனர் சர்வோட்டம் படாமி என்பவர் எடுத்து முடித்தார்.
அவருடன் ராஜா சந்திரசேகர், டி.சி.வடிவேலு நாயக்கர் ஆகியோர் இணை இயக்குனர்களாக பணியாற்றினார்கள். வி.எஸ்.சுந்தரேச அய்யர், நுங்கம்பாக்கம் ஜானகி, குமாரி ருக்மணி நடித்தார்கள்.
சுமார் 18 ரீல்களை கொண்ட இந்த படம் முன்றரை மணி நேரம் ஓடக்கூடியது. 30 பாடல்களை கொண்டது. இதை எப்படி 21 நாளில் எடுத்தார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.
அதாவது 6 மாதம் வரை ஒத்திகை நடத்தினார்களாம். அதன்பிறகு நாடகத்தை அப்படியே நடத்தி அதை அப்படியே படம் பிடித்துள்ளார்கள். சில காட்சிகள் மட்டும் குளோஸ் அப், பாடல் காட்சிகளில் கூடுதல் அசைவுகள் என படத்தை எடுத்தார்கள்.
படமும் பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் தமிழில் வெளிவந்த 3வது பேசும் படம். 4 பிரதிகள் எடுக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்டது. ஆரம்பத்திலேயே இவ்வளவு அமர்க்களமா என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?
இதன்பிறகு அதே பெயரில் சிவாஜி நடிக்க கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கத்தில் ஹரிச்சந்திரா படம் வெளியானது. படத்தில் கதாநாயகியாக ஜி.வரலட்சுமி நடித்து இருந்தார். கே.வி.மகாதேவன் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வெளியான ஆண்டு 1968.
அதன்பிறகு அரிச்சந்திரா படம் 1998ல் வெளியானது. கார்த்திக், மீனா நடித்த இந்தப் படத்தை செய்யார் ரவி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.