தமிழ் சினிமாவை ஒரு காலத்தில் கட்டி ஆண்டு கொண்டிருந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். மக்கள் மனதை கொள்ளையடிக்க கூடிய வகையிலான திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்த எம்ஜிஆர், மக்களின் குரலாக ஒலிக்கும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதன் காரணமாக, மக்கள் மத்தியில் அவர் உருவாக்கிய தாக்கம் மிக பெரிதாக உருவானது.
நடிகராக இருந்த சமயத்திலேயே மக்கள் மத்தியில் எம்ஜிஆருக்கு அதிக செல்வாக்கு இருந்த சூழலில், தொடர்ந்து அரசியல் களத்திலும் கால் பதித்தார். அதிலும் மக்கள் ஆதரவுடன் முதலமைச்சரான எம்ஜிஆர், எண்ணற்ற நலத்திட்ட உதவிகளையும் மக்களுக்காக செய்து கொடுத்துள்ளார். மக்களின் நாயகனாக வலம் வந்த எம்ஜிஆர், கடந்த 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதியன்று மறைந்தார்.
அவர் மறைந்து சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலான போதும், ஒரு முதலமைச்சராக அல்லது அரசியல்வாதியாக எம்ஜிஆர் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை என தற்போது வரை ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சினிமா, அரசியல் என மக்களுக்காக தனது வாழ்நாள் முழுக்க வாழ்ந்த எம்ஜிஆரின் மறைவிற்கு ஒட்டுமொத்த தமிழகமே சேர்ந்து பிரியா விடை அளித்திருந்தது.
அவரது மறைவிற்கு பின் இத்தனை ஆண்டுகள் கழித்து, எம்ஜிஆர் வாழ்ந்த காலகட்டத்தில் பல அறியா தகவல்கள் இணையத்தில் அதிகம் வலம் வருவதை நாம் கவனித்திருப்போம். அந்த வகையில், எம்ஜிஆர் மறைவிற்கு முன் கண்ட கடைசி திரைப்படம் குறித்த சில தகவல்களும் வெளியாகி உள்ளது.
பாரதிராஜா இயக்கத்தில், சத்யராஜின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் ‘வேதம் புதிது’. இந்த படத்தில் சங்கராச்சாரியார் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருந்த சூழலில், இது தொடர்பாக பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட, ஒரு சாரார் மத்தியில் இந்த திரைப்படம் கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. அந்த படத்தின் தணிக்கையிலும் கூட சில பிரச்சனைகள் உருவாகி இருந்தது.
இந்த திரைப்படத்தை புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு போட்டு காண்பிக்க வேண்டும் என விரும்பினார் இயக்குனர் பாரதிராஜா. இதற்கடுத்து, ஏவிஎம்மில் உள்ள தனி அரங்கம் ஒன்றில், எம்ஜிஆருக்கு பிரத்யேகமாக வேதம் புதிது படம் திரையிடப்பட்டது. படத்தை பார்த்து வியந்து போன எம்ஜிஆர், படம் சிறப்பாக இருப்பதாகவும், இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என தெரியவில்லை என்றும் கேட்டிருந்தார். அதே போல, சத்யராஜ் நடிப்பையும் எம்ஜிஆர் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆர் டிசம்பர் 24, 1987 ஆம் ஆண்டு உயிரிழந்த சூழலில், வேதம் புதிது திரைப்படம் மூன்று நாட்கள் கழித்து டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகி பெரிய அளவில் ஹிட்டாகவும் செய்திருந்தது.