முதன் முதலில் இந்தப் படத்துக்குத்தான் வெற்றி விழா கொண்டாடுனாங்களா? அதுவும் எப்படி தெரியுமா?

By John A

Published:

இன்று சினிமாக்களில் ஒரு படம் அடுத்த வாரம் வரை ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையில் ஓடினாலே வெற்றி விழா கொண்டாடி அதை விளம்பரப்படுத்துகின்றனர். ஆனால் பழைய எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் எல்லாம் பெரும்பாலானவை 100 நாட்களைக் கடந்து திரையரங்ககளில் ஓடி சாதனை படைத்திருக்கின்றன. இப்போதுள்ள படங்களுக்கு வெற்றி விழாவினை ஒரு பெரிய கலையரங்கத்தில் வைத்து படத்தில் நடித்த நடிகர்களைப் பாராட்டி நினைவுப் பரிசினை வழங்கி கௌரவிப்பது வழக்கம்.

ஆனால் அன்றைய காலகட்டங்களில் படத்தின் வெற்றி விழா என்பது சினிமா பத்திரிக்கையாளர்கள் மற்றும் வெகு சிலரே கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக இருந்திருக்கிறது. இந்த வழக்கத்தை முதன்முதலில் உடைத்து சென்னை அல்லாமல் வேறு ஒரு ஊரில் பொதுமக்கள் முன்னிலையில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது நம் மக்கள் திலகம் படத்திற்குத் தான்.

அந்தப் படம் தான் நாடோடி மன்னன். இந்தப் படத்தை உருவாக்க எம்.ஜி.ஆர் எடுத்த முயற்சிகள் ஏராளம். முதன் முதலாகத் தானே தயாரித்து, இயக்கி, நடித்து வெளிவந்த நாடோடி மன்னன் படம் அவருக்கு சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. 1958-ல் வெளியான இந்தப் படம் அந்தக் காலகட்டத்திலேயே சுமார் 1 கோடிக்கும் மேல் வசூலித்து சரித்திர சாதனை புரிந்தது. எம்.ஜி.ஆருக்கு அரசியல் மற்றும் நடிப்பில் திருப்புமுனையாகவும் இந்தப் படம் விளங்கியது.

வெறித்தனமாக இசையமைத்த இளையராஜா.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒன்று.. இளையராஜாவுக்கு 35

இப்படி பல சாதனைகளைப் புரிந்த நாடோடி மன்னன் வெற்றி விழாவானது 16.10.1958-ல் மதுரையில் நடந்தது. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து விழா நடந்த தமுக்கம் மைதானம் வரை 4 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் மக்களின் ஆரவார வரவேற்புக்கு இடையே எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

எம்.ஜி.ஆர். சென்ற சாரட் வண்டிக்கு முன் உலக உருண்டையின் மீது 110 பவுனில் தங்க வாள் எடுத்துச் செல்லப்பட்டது. விழாவில் எம்.ஜி.ஆருக்கு தங்க வாளை நெடுஞ்செழியன் பரிசளித்தார். இப்படி மிகவும் கோலகலமாக இந்தப் படத்தின் வெற்றி விழாவானது கொண்டாடப்பட்டு மதுரையையே அதிர வைத்தது. முதன்முதலில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த திரைப்பட வெற்றி விழா இதுதான்..!