தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யை உச்சாணிக் கொம்பில் அமர வைத்து அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆகி உச்ச நடிகராக மாற்றிய படம் தான் கில்லி. அதற்குமுன் காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக, பிரண்ட்ஸ் என மூன்று படங்கள் மட்டுமே அவருக்கு பெரிய ப்ளாக் பஸ்டர் வெற்றியைக் கொடுத்திருந்தது. கில்லி படம் அவரின் முந்தைய பட சாதனைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கியது.
மேலும் அன்றைய காலகட்டத்தில் அதிக வசூல் செய்த படப் பட்டியலில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் படையப்பா பட வசூலையே முறியடித்து சாதனை படைத்தது கில்லி. கில்லி படக்கதை என்பது ஒரு சாதாரணமான கதை தான். அதை கமர்ஷியலாக எப்படிக் கொடுக்க வேண்டும் என்று கில்லியாக சொல்லி அடித்தார் இயக்குநர் தரணி.
மேலும் இந்தப் படம் முழுக்க சென்னை மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகளில் படமாக்கப்பட்டது. வித்யாசாகர் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை தியேட்டரில் எழுந்து ஆட வைத்தன. குறிப்பாக அப்படிப் போடு.. போடு பாடல் இன்றளவும் சோர்ந்திருக்கும் ஒரு கூட்டத்தையே குதூகலமாக்கும் வல்லமை படைத்த பாடலாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள லொகேஷன்கள் அனைத்தும் கண்களைக் கவர்ந்தன. இந்தப் படத்தினைப் பார்த்தவர்கள் சென்னையில் இந்த இடம் எங்கே உள்ளது என்று சல்லடைபோட்டுத் தேடியிருக்கின்றனர். ஆனால் பல நாட்களுக்குப்பின் இந்த இடத்தினைப் பற்றிய உண்மையை உடைத்திருக்கிறார் கில்லி பட ஒளிப்பதிவாளர் கோபிநாத்.
கில்லி படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜுக்கு அடுத்தபடியாக இடம்பெற்றிருந்தது கலங்கரை விளக்கம் தான். நிறைய பேர் இதனை மெரீனா கலங்கரை விளக்கம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இது படத்திற்காக போடப்பட்ட செட் ஆகும். மேலும் இந்தப்படத்தில் விஜய் வீடு இருக்கும் பகுதிகள் அனைத்துமே செட் தான். மகாபாலிபுரத்தில் திரைத்துறையைச் சேர்ந்த ஒருவரின் நிலத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் இந்த பிரம்மாண்ட செட் போடப்பட்டு அதில் படமாக்கி இருக்கிறார்கள்.
பார்ப்பதற்கு அப்படியே ஒரு நிஜ ஏரியா போலவே காட்சியளிக்கும் கலை இயக்குநரின் உழைப்பு இந்தப் படத்தில் அதிகம். கிட்டத்தட்ட 1 மாதமாகமாக இதை உருவாக்கினார்கள் எனவும் ஒளிப்பதிவாளர் கோபிநாத் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
இப்படி விஜய்க்கு பல்வேறு வகைகளில் திருப்புமுனையாக அமைந்த கில்லி படம் வருகிற 20ம் தேதி மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.