நடிகரா மட்டுமில்லாம சினிமாவில் மற்றொரு துறையிலும் அசத்திய தலைவாசல் விஜய்!…

By Bala Siva

Published:

Thalaivasal Vijay : சினிமாவில் பிரபலமாகும் பலரும் தாங்கள் அறிமுகமாகும் படத்தின் பெயரை தங்கள் நிஜ பெயருடன் சேர்த்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், தலைவாசல் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி முதல் படத்தின் டைட்டிலேயே தனது பெயருக்கு பின்னால் வைத்துக் கொண்டவர் தான் தலைவாசல் விஜய்.

கடந்த 30 ஆண்டுகளாக 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தற்போதும் பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த தலைவாசல் விஜய், திரைப்படங்களில் நடிக்கும் ஆசை காரணமாக சென்னை வந்தார். பல தேடல் முயற்சிக்கு பின்னர் தான் அவருக்கு 1992 ஆம் ஆண்டு தலைவாசல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் அவர் சிறப்பாக நடித்ததையடுத்து அவருக்கு தலைவாசல் விஜய் என்ற பெயர் ஏற்பட்டது.

இந்த படத்தின் வெற்றி காரணமாக அவருக்கு தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக அதே ஆண்டு தேவர் மகன் திரைப்படத்தில் கமல்ஹாசனின் அண்ணனாக நடித்திருந்தவர், அஜித் நடித்த அமராவதி உள்பட பல படங்களிலும் தொடர்ந்து நடித்தார்.

thalaivasal vijay1 1

மணிரத்னம் இயக்கத்தில் உருவான திருடா திருடா என்ற படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்த தலைவாசல் விஜய், ’பெரிய மருது’ ’ராசையா’ ’விஷ்ணு’ ’அவதார புருஷன்’ ’தமிழ்ச்செல்வன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பெயர் எடுத்தார். சிறந்த குணச்சித்திர மற்றும் வில்லன் கேரக்டர் என்றால் தலைவாசல் விஜய்யை கூப்பிடும் அளவுக்கு இயக்குனர்கள் அவரது நடிப்பை புரிந்து வைத்திருந்தனர்.

விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த ’நேருக்கு நேர்’ திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக அவர் நடிப்பில் கலக்கி இருப்பார். அதேபோல் ’ராஜஸ்தான்’ திரைப்படத்தில் தீவிரவாதியாக நடித்ததுடன் ’கண்ணோடு காண்பதெல்லாம்’ திரைப்படத்திலும் காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருந்தார்.

ஐபிஎஸ் அதிகாரி மற்றும் தீவிரவாதி, போலீஸ் இன்ஸ்பெக்டர், அரசியல்வாதி என பல்வேறு வேடங்களில் அவர் நடித்துள்ள சூழலில், கடந்த 30 வருடங்களில் அவர் நடிக்காத வேடமே இல்லை என்று கூட சொல்லலாம். குறிப்பாக வழக்கறிஞர், மாவட்ட கலெக்டர், டாக்டர், போலீஸ், டாக்ஸி டிரைவர் உள்ளிட்ட கதாபாத்திரங்களிலும் பல படங்களில் நடித்துள்ளார். அஜீத் நடித்த காதல் கோட்டை என்ற திரைப்படத்தில் டாக்ஸி டிரைவராக நடித்த தலைவாசல் விஜய்யின் கதாபாத்திரம் தான் கிளைமாக்சில் அந்த படத்தின் கதையில் திருப்புமுனை ஏற்பட காரணமாக அமைந்திருந்தது.

thalaivasal vijay

நடிகர் தலைவாசல் விஜய் கடந்த ஆண்டு வெளியான காசேதான் கடவுளடா, பிரியமுடன் பிரியா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது கூட அவர் சில படங்களில் நடித்து வரும் சூழலில் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். இது தவிர ஒரே ஒரு ஆங்கில படத்திலும் அவர் அப்பா கேரக்டரில் நடித்து புகழ் பெற்றுள்ள தலைவாசல் விஜய்.

மேலும் நடிகர் தலைவாசல் விஜய் டப்பிங் கலைஞராகவும் இருந்துள்ளார். உல்லாசம், உயிரே, முதல்வன், கஜினி, கடம்பன் போன்ற படங்களில் அவர் டப்பிங் கலைஞராக பணிபுரிந்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் பாபு ஆண்டனிக்கு அவர்தான் டப்பிங் குரல் கொடுத்திருந்தார். இது போக சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள தலைவாசல் விஜய், சன் டிவியில் ஒளிபரப்பான அக்ஷயா, கங்கா, அழகு உள்ளிட்ட சில சீரியல்களிலும் ’கங்கா யமுனா சரஸ்வதி’ உள்ளிட்ட சில ராஜ் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

நடிக்க வந்து சுமார் 30 ஆண்டுகளான போதிலும் தனக்கு தொடர்ந்து கிடைக்கும் குணச்சித்திர கதாபாத்திரங்களை மிக கச்சிதமாகவும் பயன்படுத்தி வருகிறார் தலைவாசல் விஜய்.