தமிழ்த்திரை உலகின் முதல் கதாநாயகி, முதல் பெண் இயக்குனர் டி.பி.ராஜலெட்சுமி யார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். இதற்கு அவர் எப்பாடு பட்டார் என்று பார்க்கலாமா… இயக்குனர் பி.கே.ராஜாசாண்டோ, டி.பி.ரஜலெட்சுமியுடன் இணைந்து நல்லதங்காள் கதையை சமூகக் கதையாக மாற்றி ராஜேஸ்வரி என்ற பெயரில் படம் எடுத்தார்.
நல்லதங்காள் 7 குழந்தைகளைக் கிணற்றில் போட்டாள். ராஜேஸ்வரி கதையில் 2 குழந்தைகளுக்கு விஷத்தைக் கொடுத்துக் கொல்கிறாள். இந்தப் படத்தில் கதாநாயகியாக வரும் டி.பி.ராஜலெட்சுமி மடியிலே 2 குழந்தைகளைப் போட்டுவிட்டு பொலபொலவென்று கண்ணீர் விட்டு அழ வேண்டும். கதாநாயகிக்குக் கண்ணீர் வரவில்லை. அந்தக் காலத்தில் கிளிசரின் எல்லாம் கிடையாது.
பக்கத்தில் நின்று கொண்டிருந்த இயக்குனர் பி.கே.ராஜசாண்டோ அழும்மா… அழும்மா… என்று மிகவும் கோபமாகச் சொன்னார். அப்போதும் டி.பி.ராஜலெட்சுமிக்கு அழ முடியவில்லை.
இயக்குனர் என்ன செய்தார் தெரியுமா? அவர் கையிலே வைத்திருந்த கம்பினால் கதாநாயகியை ஓங்கி அடித்துவிட்டார். அவ்வளவு தான். புகழ் ஏணியில் உச்சியில் இருந்தார். அப்பேர்ப்பட்ட நடிகைக்கே இந்த நிலைமை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தன்னை இப்படி ஒரு இயக்குனர் அவமானப்படுத்தி விட்டாரே என்று மானம் தாளாமல் வலியும் பொறுக்க முடியாமல் மளமளவென்று கண்ணீர்விட்டு கதறிவிட்டார் டி.பி.ராஜலெட்சுமி.
விறுவிறுவென்று இயக்குனர் படப்பிடிப்பையும் எடுத்து முடித்துவிட்டார். பிறகு இயக்குனர் ராஜா சாண்டோ டி.பி.ராஜலெட்சுமியிடம் வந்து மன்னிப்புக் கேட்டார். இயக்குனரின் யுக்தியைப் புரிந்து கொண்டு டி.பி.ராஜலெட்சுமி சிரித்தார்.
1936ல் மிஸ்.கமலா என்ற படத்தைத் தயாரித்தார். கதை, வசனம், பாடல்கள் எழுதி அவரே இயக்கவும் செய்தார். முதல் பெண் இயக்குனர் டி.பி.ராஜலெட்சுமி தான். தமிழ்சினிமா உலகின் முதல் பெண் இயக்குனர் என்ற பெருமை இவரையேச் சாரும். படமும் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது.
தமிழ்சினிமா உலகின் முதல் பெண் கதாநாயகியும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை வீரன் படத்தை டி.பி.ராஜலெட்சுமி தான் தயாரித்தார். இந்தப் படம் அந்தக் காலத்திலேயே 8 முதல் 9 மாதங்களுக்கு மேல் ஓடி மாபெரும் சாதனை படைத்தது. 1943ல் உத்தமி என்ற படத்தில் தாசியாக நடித்தார்.
தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தார் சிறந்த நாடக நடிகை என்று கௌரவித்து பாராட்டு விழா நடத்தி பதக்கம் கொடுத்தனர். அந்தக் காலத்தில் ஒரு நடிகனுக்கு ஒரு வேளை சாப்பாட்டுச் செலவுக்கு கொடுத்தது வெறும் 12 அணா தானாம். சாப்பாட்டிலும் நடிகரு;களுக்குள் பாகுபாடு கிடையாது என்கிறார்.
அப்போது டி.பி.ராஜலெட்சுமி என்ன சொன்னார் தெரியுமா? ஏன் என்னை நாடக நடிகையாகப் பாராட்டினார்கள் என்று எனக்குச் சரியாக விளங்கவில்லை. நாடகத்தைவிட சினிமாவில் தான் நான் அதிகம் சேவை செய்திருக்கிறேன் என்றார்.