பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு விட்டால், அந்த பெண் பலாத்காரம் செய்தவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் மரபாக இருந்தது. தமிழ் சினிமா ஹீரோக்களும் தனது தங்கை அல்லது அக்கா வில்லனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு விட்டால் அவருக்கே மணமுடித்து வைக்க போராடும் வகையில் தான் கதையும் அமைக்கப்பட்டு இருக்கும். கமல்ஹாசனின் சகலகலா வல்லவன் உட்பட பல திரைப்படங்களின் மையக்கதை இதுதான்.
ஆனால் தமிழ் சினிமாவின் மரபை உடைத்து பாலியல் பலாத்காரம் செய்தவனை திருமணம் செய்ய மறுக்கும் ஒரு பெண், ஆனால் அதே நேரத்தில் தனது குழந்தைக்கு அவன் தான் அப்பா என நீதிமன்றம் சென்று போராடி கதை அம்சம் கொண்டது என்றால் அந்த படம் தான் விதி.
கே.பாக்யராஜ் உடன் காதல்.. திருமணத்திற்கு பின் 28 வருடங்கள் நடிக்காமல் இருந்த பூர்ணிமா ஜெயராம்..!
தமிழ் சினிமாவில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் உள்ளது போல் நீதிமன்ற காட்சிகள் இதுவரை வேற எந்த படத்தில் வரவில்லை என்பதும் ஒரு தனிச்சிறப்பு. குறிப்பாக இந்த படத்தின் ஆடியோ லட்சக்கணக்கில் விற்பனையானது. திருவிளையாடல் படத்திற்கு பிறகு அதிக ஆடியோ கேசட் விற்பனையானது இந்த படத்திற்குதான்.
இந்த படம் தெலுங்கில் வெளியான நியாயம் காவாலி என்ற படத்தின் ரீமேக்காகும். அந்த காலத்தில் ரீமேக் செய்யப்பட்டால் அப்படியே கதையை காட்சிக்கு காட்சி எடுத்திருப்பார்கள். ஆனால் ரீமேக் படம் என கொஞ்சம் கூட தெரியாமல் இந்த படத்தை அனுபவம் வாய்ந்த இயக்குனரான கே.விஜயன் இயக்கியிருப்பார்.
பணக்கார வீட்டு பையன் மோகன், நீதிமன்ற குமாஸ்தாவின் மகள் பூர்ணிமாவை காதலிப்பார். காதலில் விழும் பூர்ணிமா ஒரு கட்டத்தில் தன்னையே இழந்து விடுவார். பூர்ணிமாவை அடைந்தவுடன் மோகன் அவரை திருமணம் செய்ய மறுக்கும் நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக பூர்ணிமா தெரிவிப்பார். நீ கர்ப்பமாக இருந்தால் எனக்கு என்ன? கர்ப்பத்தை கலைத்துவிடு, அப்படியே கலைக்காவிட்டாலும் நான் தான் அப்பா என்பதற்கு என்ன சாட்சி என்று எகத்தாளமாக பேச வெகுண்டு எழும் பூர்ணிமா தன்னை போல் நிலைமை இந்த நாட்டில் வேறு எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று நீதிமன்றம் செல்வதுதான் இந்த படத்தின் கதை.
இதில் சகுந்தலா தேவி என்ற வழக்கறிஞர் கேரக்டரில் சுஜாதா நடித்திருப்பார். மோகன் வழக்கறிஞராக அவரது தந்தை ஜெய்சங்கர் நடித்திருப்பார். இந்த படத்தின் நீதிமன்ற காட்சிகளை தானே நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் பாலாஜி நீதிபதியாக நடித்திருந்தார்.
இந்த படத்தின் இடைவேளைக்கு பின் வரும் கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளும் நீதிமன்ற காட்சிகள்தான் இருக்கும். வாத, பிரதிவாதங்கள், ஜெய்சங்கர் மற்றும் சுஜாதாவுக்கு இடையே நடக்கும் நீதிமன்ற மோதல்கள் பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கும்.
தண்ணீர் பிரச்சனையை தைரியமாக சொன்ன ஒரே இயக்குனர்.. ‘தண்ணீர் தண்ணீர்’ உருவான கதை..!
நீதிமன்ற காட்சிகள் சலிப்படைய வைக்க வாய்ப்பு உள்ளது என்பதற்காக இந்த படத்தில் எதிர்பாராத ஒரு திருப்பமாக பாக்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். இயக்குநராக அவர் நடித்திருந்த நிலையில் அவரை ஒரு பத்திரிகையாளர் பேட்டி எடுப்பது போன்ற காட்சி இருக்கும். பூர்ணிமா வழக்கு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று பத்திரிகையாளர் கேட்கும்போது அவர் சொல்லும் புத்திசாலித்தனமான பதில் மிகச் சிறப்பாக இருக்கும்.