நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த ஸ்டண்ட் கலைஞர்.. தினேஷ் மாஸ்டரின் திரையுலக வாழ்க்கை..!

By Bala Siva

Published:

தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக தனது பணியை தொடங்கி அதன் பின்னர் நடிகராகவும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார் என்றால் அவர்தான் தினேஷ் மாஸ்டர்.

ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான ’நான் சிகப்பு மனிதன்’ என்ற படத்தில் தான் முதல்முறையாக தினேஷ், ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார்,கார்த்திக், பிரபு என பல நடிகர்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராகவும் நடிகராகவும் பணிபுரிந்தார்

குறிப்பாக இவர் நடிகர் என்று வெளியே தெரிந்த படம் என்றால் அது பாட்ஷா தான். ரஜினிகாந்தின் குரூப்பில் ஐந்து நபர்களில் ஒருவராக தினேஷ் இருப்பார் என்பதும், இந்த படத்தில் நடித்த பின்னர் தான் தனக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்தது என்றும் ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் கூறியுள்ளார்.

dinesh2

உத்தம புருஷன், நடிகன், அர்ச்சனா ஐஏஎஸ், தளபதி, நாடோடி பாட்டுக்காரன், உழைப்பாளி, வேடன், சின்ன ஜமீன், ராஜதுரை, பாட்ஷா உட்பட நூற்றுக்கணக்கான படங்களில் அவர்  ஸ்டண்ட் மாஸ்டராகவும், நடிகராகவும் பணிபுரிந்துள்ளார்.  திரையுலகில் மட்டும் இன்றி தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். லொள்ளு சபா, தென்றல், வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் அவர் நடித்துள்ளார்.

தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அவர் விஜயகாந்த் தான் என்றும் ஸ்டண்ட் காட்சியின் போது சலிப்பே இல்லாமல் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் நடிப்பார் என்றும் தினேஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்

அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவி ஒரு காட்சியை கூட டூப் போட அனுமதிக்க மாட்டார் என்றும் மிகவும் இயல்பாக சண்டை போடுவார் என்றும் கூறியுள்ளார். மலையாளத்தில் மோகன்லால் ஸ்டண்ட் மாஸ்டர் போலவே சண்டை போடுவார் என்றும் அவருடன் நடிக்கும் போது நாங்கள் மிகவும் கவனமாக இருப்போம் என்றும் கூறியிருந்தார்.

dinesh1

அதேபோல் நடிகைகளுக்கும் தினேஷ், ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். விஜயசாந்தி நடித்த பல ஆக்சன் படங்களுக்கு இவர் தான் ஸ்டண்ட் மாஸ்டராக பணி உள்ளதாகவும் , ராதிகா அவர்களிடம் நேருக்கு நேருக்கு நேர் ஒரு படத்தில் சோலோ சண்டை போட்டுள்ளதாகவும் கூறினார்.

அதேபோல் பவானி என்ற திரைப்படத்தில் சினேகாவுடன் சண்டை போட்டதாகவும் அவர் மிகவும் அற்புதமாக அந்த படத்தில் சண்டை போட்டார் என்று கூறினார். தொடர்ச்சியாக சினேகா ஸ்டண்ட் படங்களில் நடித்திருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்றிருப்பார் என்றும் ஆனால் அவர் புன்னகை அரசி என்பதால் அந்த படத்திற்கு பிறகு ஸ்டண்ட் படங்களில் அவர் அடிக்கவில்லை என்றும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்

ஸ்டண்ட் மாஸ்டராகவும், ஸ்டண்ட் நடிகராகவும் நூற்றுக்கணகான படங்களில் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த தினேஷ் சமீபத்தில் வெளியான ‘சந்திரமுகி 2’ படத்தில் கூட ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.