ஒரு படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக இருப்பவர்களின் முகங்கள் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்காது. இந்த வரையறைக்கு அப்பாற்பட்டு பீட்டர் ஹெயின், அனல் அரசு, அன்பறிவ் உள்ளிட்ட சில இயக்குனர்களை சொல்லலாம். அப்படி சில படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் தோன்றி பெயர் எடுத்த ஸ்டண்ட் மாஸ்டர் தான் கனல் கண்ணன்.
இவர் அஜித், விஜய் படங்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். அதிலும் கனல் கண்ணனின் ஆக்ஷன் மற்றும் காமெடி அம்சங்கள் நிறைந்து பார்க்கும் அனைவரையும் தொடர்ந்து சண்டைக்காட்சிகளை கூட விரும்பி பார்க்க வைக்கும். ஸ்டண்ட் இயக்குனராக மட்டுமில்லாமல், சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். அதில் சில படங்களில் காமெடி காட்சிகளிலும், சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களான அஜித் ,விஜய், விக்ரம், சூர்யா, விஷால், அர்ஜுன், சரத்குமார் உள்ளிட்ட பலரின் படங்களில் பணிபுரிந்துள்ளார். தற்போது முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்களாக இருக்கும் ஸ்டண்ட் சிவா, அனல் அரசு, ஸ்டண்ட் செல்வா உள்ளிட்ட பலர் இவரிடம் பணிபுரிந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டண்ட் இயக்குனராக அவர் சரத்குமார் நடித்த ’சேரன் பாண்டியன்’ என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார். முதல் படத்திலிருந்து அதிரடி ஸ்டண்ட் காட்சிகளை அமைத்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். அதன் பிறகு அன்புச் சங்கிலி, ஊர் மரியாதை, முதல் சீதனம், கிழக்கு வெளுத்தாச்சு, அபிராமி ,கோகுலம், கேப்டன் பிரியங்கா, மனிதன், சின்ன மேடம், செவ்வந்தி, புதிய மன்னர்கள், சின்னமணி, விஷ்ணு, பெரிய குடும்பம், முத்து, அருவா வேலு, அவதார புருஷன் உள்ளிட்ட பல படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
கடந்த 1990களில் ஆரம்பித்த அவரது ஸ்டண்ட் இயக்குனர் பணி கிட்டத்தட்ட 35 வருடங்களாக தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி, சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களுக்கு அவர்தான் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்தார். தற்போது கூட அவர் ரத்னம், பாம்பன் உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்து வருகிறார்.
ஸ்டண்ட் இயக்குனரான கனல் கண்ணன் தனது காமெடி மற்றும் வில்லத்தனம் கலந்த நடிப்பின் மூலம் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.
நடிகர் மற்றும் ஸ்டண்ட் இயக்குனர் கனல் கண்ணன் ‘சங்கரன்கோவில்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் அவர் ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார். தமிழ்நாடு அரசின் சிறந்த ஸ்டண்ட் இயக்குனர் விருது முத்து படத்திற்காக கிடைத்தது. மேலும் விஜய் டிவி உட்பட பல தொலைக்காட்சிகளும் அவருக்கு ஏராளமான விருதுகளை அளித்துள்ளது.
கனல் கண்ணன் அரசியலிலும் நுழைந்தார். பாஜகவில் இணைந்த அவர் சில சமயம் சர்ச்சை கூறிய வகையில் பேசியதாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சில நாட்கள் அவர் சிறையில் இருந்துள்ளார். அவரது அரசியல் பாதையில் சில பிரச்சனைகள் இருந்தாலும் சினிமாவில் பலரின் ஃபேவரைட் ஸ்டண்ட் இயக்குனராக இப்போதும் கனல் கண்ணன் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.