Sridevi: சிவகாசியை பூர்வீகமாகக் கொண்டவர் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். 70களில் தொடங்கி இன்று வரை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் கமல், ரஜினி இவர்கள் இருவருடனும் இணைந்து ஒரே படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் வாய்ப்பு ஸ்ரீதேவிக்கு கிடைத்தது. அந்தப் படம் ’மூன்று முடிச்சி’ கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம். அப்படம் ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகிய மூவருக்குமே முக்கியப் படமாக அமைந்தது.
அழகிற்கு இலக்கணம் போல அமைந்த ஸ்ரீதேவியின் வசீகரம் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என எல்லா மொழி ரசிகர்களையும் கட்டிப் போட்டிருந்தது. சிறுவயதில் இருந்த முழு நேரத்தையும் சினிமாவில் செலவிட்டவர் ஸ்ரீதேவி. பள்ளி, கல்லூரி செல்வதற்கான வாய்ப்பினை இழந்தபோதும், அதை பற்றி நினைக்க கூட முடியாத அளவிற்கு சினிமாவில் பிசியாக இருந்ததாக கூறப்படுகிறது.
1986ல் வெளியான ’நான் அடிமையில்லை’ படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவை விட்டு விலகினார். நீண்ட இடைவெளிக்கு பின் விஜய்யின் ’புலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஸ்ரீதேவி மீது காதல் கொள்ளதவர்கள் யாரும் இருக்க முடியாத கால கட்டத்தில், நடிகர் அனில் கபூரின் சகோதரரான போனி கபூர் முதல் முறையாக ஸ்ரீதேவி நடித்த தமிழ் படத்தை பார்க்கிறார். பார்த்த நொடியே அவர் மீது காதல் கொள்ளத் தொடங்கிவிடுகிறார். அவரை தொடர்ந்து சென்னை வந்த போதும் சந்திக்க முடியாமல் போய் விடுகிறது.
இருப்பினும் தனது, சகோதரின் படமான ’மிஸ்டர் இந்தியா’வில் ஸ்ரீதேவி நடிக்க வைத்தே ஆக வேண்டும் முயற்சித்து வெற்றி கொண்டார். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரே என்பதால், அதுவரை ஸ்ரீதேவி பெற்ற சம்பளத் தொகையை காட்டிலும் சற்று கூடுதலாகவே கொடுத்துள்ளார். போனி கபூர் ஸ்ரீதேவியிடம் காதலை வெளிப்படுத்திய சமயத்தில் அவர் ஏற்கனவே திருமணமானவர். அவரை காதலிப்பது சரியில்லை என விலகியே இருந்த ஸ்ரீதேவி பின் அவரது காதலை ஏற்றுக் கொண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். இப்படிப்பட்ட இவர்கள் வாழ்க்கையில் 2018ம் வருடம் பேரிடியாக அமைந்தது. அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துபாயில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள ஸ்ரீதேவி குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அங்கிருந்து ஸ்ரீதேவியின் உயிரற்ற உடல் மட்டுமே இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. பாத்ரூம் டப்பில் மூழ்கி கிடந்த ஸ்ரீதேவியை மீட்டு பரிசோதனை செய்தவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஸ்ரீதேவி இறப்பில் மர்மம் ஏதும் இருக்ககூடும் என அவரது குடும்பத்தினர் பல மணிநேரம் துபாயில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இருப்பினும் சந்தேகப்படும் படியாக எதுவும் இல்லாததால், எதிர்பாரவிதமாக நடந்த விபத்தாக கருத்தப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். அதில், உடல் பராமரிப்பு மற்றும் அழகினை மெருகேற்றிக் கொள்வதில் ஸ்ரீதேவி தீவிரமாக இருப்பார்.
கடுமையான உணவுக் கட்டுப்பாட்டினை பின்பற்றி வந்தார். சாப்பிடாமல் பல நாட்கள் இருந்து உடல் எடையினை கட்டுக்குள் வைத்திருப்பார். அப்படியே சாப்பிட்டாலும் உப்பில்லாத உணவினை மட்டுமே சாப்பிடுவார். தொடர்ந்து உப்பில்லாத உணவினை சாப்பிட்டு வந்ததால் அவருக்கு குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை இருந்தது. இதனால் அடிக்கடி மயக்கமடைந்து விடுவார். அவரது இறப்பின்போது இதுபோன்றே மயக்கமடைந்து பாத்டப்பில் விழுந்து மூச்சுத்திணறி இறந்திருக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.