தென்னிந்தியாவின் முதல் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று போற்றப்படும் சரோஜாதேவி இன்று காலை காலமான நிலையில், அவருக்கு ரசிகர்களும் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 87 வயதான சரோஜாதேவி 1938 ஆம் ஆண்டு பிறந்த நிலையில், அவர் 17 வயதிலேயே திரையுலகில் நடிக்க வந்துவிட்டார். அவரது முதல் படம் ‘மகாகவி காளிதாஸ்’ என்ற கன்னட படம் என்பதும், இந்த படம் 1955 ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அவர் 1956 ஆம் ஆண்டு ‘திருமணம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பி.ஆர். பந்துலு இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஜெமினி கணேசன் நாயகனாக நடித்திருந்தார். அதன்பின் அவர் எம்ஜிஆரின் ‘நாடோடி மன்னன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதன் பின் தமிழில் உள்ள அனைத்து முக்கிய நடிகர்களுடனும் அவர் நடித்துள்ளார் என்பதும், குறிப்பாக சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். ஆகியவர்களுடன் மிக அதிகமான படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழில் ஏராளமான படங்கள் நடித்தாலும், அவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் ‘கன்னடத்து பைங்கிளி’ என்ற செல்லப் பெயர் தான் இருந்தது என்பதும், தென்னிந்திய அளவில் அவர் அப்போதே ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆக போற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஸ்வர ராவ், ராஜ்குமார், திலீப் குமார், சந்திரபாபு என தென்னிந்திய மற்றும் வட இந்திய முக்கிய ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துள்ளார். ஒரு காலகட்டத்தில் சரோஜாதேவிக்காகவே படக்குழுவினர் காத்திருப்பார்கள் என்பதும், எம்.ஜி.ஆரே படப்பிடிப்பிற்காக காத்திருக்கும் அளவுக்குப் பிசியான நடிகையாக சரோஜாதேவி இருந்தார் என்பதும், தினமும் கிட்டத்தட்ட 20 மணி நேரமாகப் படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட காலமும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
200க்கும் மேற்பட்ட படங்களில் சரோஜாதேவி நடித்துள்ளார் என்பதும், குறிப்பாக நாயகி முக்கியத்துவம் உள்ள படங்களில் அவர் அதிகமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘இருவர் உள்ளம்’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘அன்பே வா’, ‘படகொட்டி’ போன்ற படங்கள் சரோஜாதேவிக்கு மிகவும் அம்சமான கதாபாத்திரங்களாக அமைந்தன.
காதல், திருமணம் மற்றும் எம்.ஜி.ஆர். உடனான நட்பு
சரோஜாதேவியை அன்றைய முன்னணி நடிகர்கள் பலர் காதலித்ததாகவும், தங்கள் காதலை அவரிடம் வெளிப்படுத்தியதாகவும் கூறப்பட்டதுண்டு. ஆனால், எந்த ஒரு நடிகரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்பதில் சரோஜாதேவி உறுதியாக இருந்தார். அவர் யாருடைய காதலையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பின் 1967 ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த இன்ஜினியர் ஸ்ரீஹர்சா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்டதன் பின் அவர் நடிப்பையும் குறைத்து கொண்டார்.
“ஏன் எந்த நடிகரின் காதலையும் நீங்கள் ஏற்கவில்லை?” என்ற கேள்விக்கு அவர் ஒரு பேட்டியில் பதில் அளித்தபோது, “நான் என்னுடைய அம்மா பேச்சை மீறமாட்டேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அம்மா என்னிடம், ‘சினிமாவில் இருப்பவர்களை நீ திருமணம் செய்யக்கூடாது. காதல் என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது. ஏனென்றால், உனக்குத் தங்கைகள் இருக்கிறார்கள், அவர்களுடைய வாழ்க்கை உன்னால் பாதிக்கப்படக்கூடாது’ என்று அழுத்தம் திருத்தமாக சொன்னதால்தான் எனக்கு எந்த நடிகருடனும் காதல் வரவில்லை. என்னை காதலித்த நடிகர்களின் காதலையும் நான் ஏற்கவில்லை” என்று தெரிவித்தார்.
எம்.ஜி.ஆருடன் 26 படங்களில் நடித்துள்ள சரோஜாதேவி, சிவாஜிக்கு ஜோடியாக 22 படங்களிலும், ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக 17 படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் என்பதும், அவருக்கு பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகளும், தமிழக அரசின் கலைமாமணி, பெங்களூர் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் ஆகியவையும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர். உடன் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்த சரோஜாதேவி கடைசியாக ‘அரசு கட்டளை’ என்ற படத்தில் 1967 ஆம் ஆண்டு நடித்தார். அதன் பிறகு அவருடன் இணைந்து நடிக்கவில்லை. ஜெயலலிதா திரையுலகில் கொடி கட்டி பறந்த பின்னர், எம்.ஜி.ஆர். ஜோடியாக ஜெயலலிதா தான் பல படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவும் சரோஜாதேவியும் நெருங்கிய தோழிகள் என்பது பலருக்கும் தெரியாத உண்மையாகும். “ஜெயலலிதாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருக்கும் என்னை ரொம்பப் பிடிக்கும். என்னை அடிக்கடி வரவழைத்து பல விஷயங்களைப் பேசுவார். நடிகையாக இருந்தபோது எப்படி நட்பாகப் பேசுவார்களோ, அதே போல் தான் முதல்வராக இருந்தபோதும் என்னிடம் நட்பாகப் பேசுவார். மக்களுக்காக நிறைய செய்த முதல்வர்களில் ஒருவர் ஜெயலலிதா” என்று கூறியுள்ளார்.
அதேபோல், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது செயல்படுத்திய பல திட்டங்கள் தன்னை கவர்ந்ததாகவும், குறிப்பாக சத்துணவு திட்டத்தை நான் மிகவும் மதித்தேன் என்றும், “ஒரு குழந்தை பசியோடு இருந்தால் படிக்க முடியாது என்பதை உணர்ந்து உருவாக்கப்பட்ட திட்டம் தான் அந்த திட்டம்” என்றும் அவர் தெரிவித்தார்.
சிறந்த ஜோடி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை
“எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகிய மூவரில் உங்களுக்குப் பெஸ்ட் ஜோடி யார்?” என்று ஒரு பேட்டியில் சரோஜாதேவி கூறியபோது, “எம்.ஜி.ஆர். தான்” என்று அவர் கூறினார். ஏனென்றால், “எம்.ஜி.ஆர். சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோ. நல்ல உள்ளத்தோடு எல்லோருக்கும் பல உதவிகள் செய்வார்” என்றும் அவர் பதில் அளித்தார்.
சரோஜாதேவி ஸ்ரீஹரிசா என்பவரை 1967 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், 19 வருடம் மட்டுமே அவர்களுக்குத் திருமண வாழ்க்கை நீடித்தது. 1986 ஆம் ஆண்டு அவருடைய கணவர் எதிர்பாராத வகையில் காலமாகிவிட்டார். “இளம் வயதிலேயே கணவரை இழந்தாலும் ஏன் மறுமணம் செய்யவில்லை?” என்ற கேள்விக்கு, “என் கணவர் ரொம்ப அன்பானவர். அக்கறையாக என்னை பார்த்துக் கொண்டார். அவருடைய நினைவு என் மனதில் இருந்து நீங்காததால் மறுமணம் செய்ய தோணவில்லை” என்று கூறினார்.
சரோஜாதேவி தென்னிந்தியாவில் ஒரு மிகப்பெரிய நடிகையாக இருந்தாலும், அவருடைய இரண்டு குழந்தைகளும் திரையுலகம் பக்கமே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்குமே திரையுலகில் நடிப்பதற்கோ அல்லது வேறு துறைகளிலும் விருப்பமில்லை என்று அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகிய முதல் தலைமுறை நடிகர்களுடன் நடித்த அவர், ரஜினி, கமலுடன் நடிக்கவில்லை. ‘பார்த்தால் பசிதீரும்’ என்ற படத்தில் மட்டும் கமல் குழந்தை நட்சத்திரமாக சரோஜாதேவியுடன் நடித்திருந்தார். ஆனால் ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தில் சரோஜாதேவி விஜய்யுடன் நடித்திருந்தார் என்பதும், ‘இருவர் உள்ளம்’ திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் சரோஜாதேவி நடித்த அதே கதாபாத்திரம் தான் ‘ஒன்ஸ் மோர்’ படத்தில் காட்டப்பட்டிருக்கும் என்பதும், விஜய் மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் சிவாஜி மற்றும் சரோஜாதேவியுடன் நடித்த ஒரே படம் இதுதான் என்றும் குறிப்பிடத்தக்கது.
கடைசியாக அவர் தமிழில் நடித்த திரைப்படம் சூர்யா, நயன்தாரா நடித்த ‘ஆதவன்’ என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் ஒரு கன்னட படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பதும், இதுவே அவரது கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2020 ஆம் ஆண்டு ‘கோடீஸ்வரி’ என்ற கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டிருந்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
