ஒரு ரூபாய் கூட இல்லாமல் இருந்தவரை தயாரிப்பாளராக்கிய சிவாஜி… யாருன்னு தெரியுமா?

By Sankar Velu

Published:

நடிகர் திலகம் சிவாஜி என்றாலே தமிழ்த்திரை உலகின் பொக்கிஷம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இப்படி ஒரு நடிகரை நாம் பெற்றதற்கு நம் தமிழ் இனத்துக்கே பெருமை என்று தான் சொல்ல வேண்டும். அவர் திரை உலகிலும் பல ஜாம்பவான்களை வளர்த்து விட்டவர் என்றால் மிகையில்லை. அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

சிவாஜியை வைத்து ஸ்ரீதர் இயக்கிய படம் ‘எதிர்பாராதது’. இது ‘ரங்கோன் ராதா’ படம் வருவதற்கு முன் வெளியானது. 1954ல் ‘எதிர்பாராதது’ என்ற படம் வந்தது. செங்கல்பட்டில் இருந்து ரத்த பாசம் என்ற நாடகத்தின் மூலம் திரையுலகில் அடி எடுத்து வைத்தவர் ஸ்ரீதர். சமூகப்படங்களில் நாடகத்தமிழில் இருந்த உரையாடல்களைத் துணிந்து பேச்சுத்தமிழாக சினிமாவில் அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதர்.

இவர் திரைப்படத்திற்கு என்று முதலில் எழுதிய கதை தான் எதிர்பாராதது. வித்தியாசமாக கதை அம்சம் கொண்ட இந்தப் படத்திற்கு இந்திய அரசின் நற்சான்றிதழ் விருது கிடைத்தது.

சென்னை நகரத்தில் புதிய படங்கள் 3 திரையரங்குகளில் வெளியாவது தான் வழக்கம். முதன்முறையாக சென்னையில் மனோகரா 5 திரையரங்குகளில் வெளியானது. எதிர்பாராதது படமும் 5 திரையரங்குகளில் வெளியானது.

இந்தப்படம் சிவாஜி, ஸ்ரீதர் என இருவருக்கும் நல்ல பெயரைத் தந்தது. தொடர்ந்து சிவாஜியை வைத்து படம் இயக்க விரும்பினார். அமரதீபம் கதையை சிவாஜியிடம் சொன்னார். அதற்கு அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்போது ஸ்ரீதர் ஒரு கோரிக்கையை வைத்தார்.

Sridhar AK
Sridhar AK

என் தயாரிப்பில் நீங்க நடிக்க சம்மதிச்சதுக்கு நன்றி. என்னிடம் இப்போது 1 ரூபாய் கூட இல்லை. உங்க படத்தைப் போட்டு விளம்பரம் பண்ணுறேன். அதைப் பார்த்து விநியோகஸ்தர்கள் முன்பணம் தருவார்கள். அதை வைத்து படம் எடுத்து வெளியிட்டு விடுவேன் என்றார். அதற்கு சிரித்துக்கொண்டே சொன்னார் சிவாஜி.

‘நீ இளைஞன். உனக்கு வேண்டிய உதவிகளை நான் செய்யுறேன். எனக்கு நீ சம்பளம் தர வேண்டாம். படத்தயாரிப்பு வேலைகளைத் தொடங்கு’ என்றார். ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ படத்தில் பி.ஆர்.பந்துலுவைத் தயாரிப்பாளர் ஆக்கி அழகு பார்த்தார். ‘அமரகாவியம்’ படத்திற்காக ஒரு ரூபாய் கூட இல்லாமல் இருந்த ஸ்ரீதரை தயாரிப்பாளர் ஆக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாகப் படத்தைத் தயாரித்ததால் ஸ்ரீதருக்கு பட விநியோகம் பற்றி தெரியாது. அதனால் சிவாஜி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி அமரதீபம் படத்தின் விநியோகஸ்தத்தை சிவாஜி கவனித்தார். இந்தப்படத்தில் சிவாஜிக்கு முதன்முறையாக ஜோடியாக சாவித்திரி நடித்தார். பத்மினி, நம்பியார், நாகையா உள்பட பலரும் நடித்தனர். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது.