நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து ப வரிசையிலே பல வெள்ளி விழா படங்களைத் தந்தவர் இயக்குனர் பீம்சிங். சிவாஜியோடு பீம்சிங்கிற்கு இருந்த நட்பு காரணமாகத் தான் எம்ஜிஆரைத் தன் வாழ்நாள் முழுவதும் பீம்சிங் ஏற்கவில்லை என்ற ஒரு செய்தி இன்றுவரையில் தமிழ்சினிமா உலகில் பேசப்பட்டு வருகிறது.
எம்ஜிஆருக்கும், பீம்சிங்கிற்கும் இருந்த உறவைப் பற்றி அறியாதவர்கள் பேசிய பேச்சுதான் அது. இருவருக்கும் இருந்தது அப்படிப்பட்ட ஒரு அற்புதமான உறவு. பியு.சின்னப்பா கதாநாயகனாக நடித்த படம் ரத்தினகுமாரி. அந்தப் படத்தில் எம்ஜிஆர் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். அந்தப் படத்தை இயக்கியவர் கிருஷ்ணன் பஞ்சு.
அதன் காரணமாக அந்தப் படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்தார் பீம்சிங். அப்போது அந்த சிறிய வேடத்தில் நடித்த எம்ஜிஆரிடம் மிகவும் பாசத்தோடும், பரிவோடும் பேசுவாராம் பீம்சிங். அந்தக் காலகட்டத்தில் இருந்த எம்ஜிஆருக்கும், அவருக்கும் மிக நல்ல நட்பு இருந்தது. இதற்குப் பின்னால் பதிபக்தி என்ற படத்தைத் துவங்கினார் பீம்சிங். அதில் கதாநாயகனாக நடித்தவர் சிவாஜி. அதில் இன்னொரு கதாநாயகனாக ஜெமினிகணேசன் நடித்தார். அந்தப் படத்தின் தொடக்கவிழாவில் ஓடி ஆடி வேலை செய்தவர் எம்ஜிஆர்.
அப்படி அவர்களுக்குள்ளே நல்ல உறவு இருந்தது. ஒரு காலகட்டத்திலே பீம்சிங் இயக்கத்தில் தான் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார் எம்ஜிஆர். அதற்கான வேலைகளும் நடந்தன. எம்ஜிஆருடைய தோட்டத்திலே அந்தப் படத்துக்கான கதை விவாதமும் நடந்தது.
ஆனால் ஒரு காலகட்டத்திலே எம்ஜிஆர் அரசியலிலே மிகத் தீவிரமாக ஈடுபட்ட காரணத்தினால் தான் பீம்சிங்கால் எம்ஜிஆரை இயக்க முடியாமல் போனது. இந்த உண்மை தெரியாததால்தான், சிவாஜியோடு தனக்கு இருந்த நட்பு காரணமாகத்தான் எம்ஜிஆரை பீம்சிங் மறுத்து விட்டார் என்று இன்றும் திரை உலகிலே பலரும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



