சிவாஜி படத்தில் ஹீரோவாக நடித்த காமெடி நடிகர்.. டி.ஆர்.ராமச்சந்திரன் வாழ்க்கை பயணம்..!

By Bala Siva

Published:

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படத்திலேயே ஒரு காமெடி நடிகர் நாயகனாக நடித்தார் என்றால் அவர் தான் டி.ஆர்.ராமச்சந்திரன்.

நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன் கடந்த 1917-ம் ஆண்டு கரூர் மாவட்டத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே அம்மாவை இழந்த டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு பள்ளி படிப்பு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனையடுத்து அவரை வலுக்கட்டாயமாக அவரது தந்தை குருகுல பள்ளியில் சேர்த்தார். ஆனால், ‘எனக்கு படிப்பு வேண்டாம், நாடகத்தில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை’ என தந்தையிடம் கூறுவார்.

கவுண்டமணி – செந்தில் காமெடிக்கு காரணமானவர்.. சிவாஜியின் நெருங்கிய நண்பர்.. யார் இந்த ஏ.வீரப்பன்..!

இந்த நிலையில்தான் டி.ஆர்.ராமச்சந்திரனின் குடும்ப நண்பர் ராகவேந்திரா என்பவரின் நாடகத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தில் நடித்து அவருடைய நடிப்பை பொதுமக்கள் ரசிக்கத் தொடங்கிய நிலையில், அவர் தனது பாதை நாடக உலகம் தான் என்பதை முடிவு செய்தார். அவர் பல நாடக கம்பெனிகளில் இணைந்து நாடகங்களில் நடித்தார். அவருக்கு மூன்று வேளை சாப்பாடு, மாதம் மூன்று ரூபாய் சம்பளம் மட்டுமே நாடக கம்பெனியில் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஏவிஎம் மெய்யப்பட்ட செட்டியாரை பார்க்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த நந்தகுமார் என்ற திரைப்படத்தில் அவர் ஹீரோவாக நடித்தார். 1938-ம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அந்த காலத்தில் ஹீரோ என்றால் வாட்டசாட்டமான உடல்வாகு, வாள் சண்டை தெரிந்திருக்க வேண்டும், நடனம் தெரிந்திருக்க வேண்டும் என்று இருந்த நிலையில் முதன் முதலாக ஒரு காமெடி கதையை மையமாகக் கொண்டு ஹீரோவாக நடித்தார் என்றால் அதுதான் டிஆர் ராமச்சந்திரன்.

‘நந்தகுமார்’ வெற்றிக்கு பிறகு அவருக்கு வாயாடி, சபாபதி, கண்ணகி, பிரபாவதி உள்ளிட்ட படங்களில் வாய்ப்பு கிடைத்தது. டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்த கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற திரைப்படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் ஹீரோ என்பதும், சிவாஜி இரண்டாவது ஹீரோ என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக பத்மினி நடித்திருந்தார். டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு ஜோடியாக பத்மினியின் சகோதரி ராகினி நடித்திருந்தார். கடந்த 1954-ம் ஆண்டு வந்த இந்த காமெடி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

விகே ராமசாமி ஹீரோவாக நடித்த படம்.. எம்ஜிஆர்-சிவாஜி படங்களுக்கு இணையாக வசூல்..!

இதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடம், குணச்சித்திர வேடங்களில் நடித்தார். எம்ஜிஆர் நடித்த பாசம், சிவாஜி நடித்த ஆலயமணி, அறிவாளி, இருவர் உள்ளம் ஆகிய படங்களிலும் கண்ணதாசனின் வானம்பாடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

1969-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த அன்பளிப்பு என்ற படத்தை அடுத்து அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அதன் பின்னர் அவர் அமெரிக்காவில் தனது மகளுடன் வசித்து வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் 1982-ம் ஆண்டு ‘தேவியின் திருவிளையாடல்’ என்ற படம் உருவானது. தியாகராஜன், ஸ்ரீதேவி, ராஜேஷ் நடித்த இந்த திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நீண்ட இடைவேளைக்கு பிறகு டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்தார்.

தமிழ் திரையுலகில் ஒரு நகைச்சுவை நடிகராக இருந்தாலும் முன்னணி கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர். 1954-ம் ஆண்டு இவர் சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பொன்வயல் என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் ஜோடியாக அஞ்சலிதேவி நடித்தார். இந்த படத்தில் தான் சீர்காழி கோவிந்தராஜன் பின்னணி பாடகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கோமதியின் காதலன் என்ற கதையை அதே பெயரில் திரைப்படமாக தயாரித்தார். இந்த படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் ஜோடியாக சாவித்திரி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைந்து போன தமிழ் திரைப்படம்.. இப்போ நினைச்சா கூட பார்க்க முடியாத படம் எது தெரியுமா?

1948-ம் ஆண்டு டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு திருமணம் நடந்தது. ஜெயந்தி, வசந்தி ஆகிய இரண்டு மகள்கள் இவருக்கு இருக்கின்றனர். இந்த நிலையில் 1990-ம் ஆண்டு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அதன் பின்னர் அவர் காலமானார். டி.ஆர்.ராமச்சந்திரன் காலமானாலும் அவரது உருண்ட விழிகள், அப்பாவித்தனமான நடிப்பு இன்னும் மக்கள் மனதில் இருக்கும்.