குதர்க்கமான கதாபாத்திரம்.. சிவாஜி படத்திற்கு கிடைத்த ‘ஏ’ சான்றிதழ்.. சென்சார் அதிகாரிகளை அலற வைத்த படம்..

By Bala Siva

Published:

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காலத்தால் மறைந்தாலும் நடிப்பில் ஜொலித்த அவரது படைப்புகள் காலம் கடந்து நிலைத்து நிற்கக் கூடியவை ஆகும். அப்படி இருக்கையில், சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான படம் ஒன்றிற்கு ஏ சான்றிதழ் கிடைத்தது பற்றியும், அதன் பின்னர் நடந்த சம்பவம் பற்றிய செய்தி தொகுப்பையும் காணலாம்.

சிவாஜி கணேசன் நடித்த சாந்தி என்ற திரைப்படத்திற்கு தான் சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தனர். 1965 ஆம் ஆண்டு வெளியான சாந்தி படத்தில் சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி, தேவிகா, எம் ஆர் ராதா, நாகேஷ், நாகையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் சிவாஜி கணேசன் ஜோடியாக தேவிகா, எஸ் எஸ் ராஜேந்திரன் ஜோடியாக விஜயகுமாரி ஆகியோர் நடித்திருப்பார்கள்.

இந்த படத்தில் எஸ் எஸ் ராஜேந்திரனுக்கு விஜயகுமாரியை திருமணம் செய்து வைக்க பெரியோர்கள் முடிவு செய்வார்கள். ஆனால் தாலி கட்டியவுடன் தான் தனது மனைவி விஜயகுமாரி கண் பார்வையற்றவர் என்பது தெரியவரும். இதனை அடுத்து எஸ் எஸ் ராஜேந்திரன் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் மணவறையிலேயே விஜயகுமாரியை விட்டுவிட்டு தலைமறைவாகி விடுவார்.

இந்த நிலையில் கண்பார்வையற்ற விஜயகுமாரி தனது கணவன் ஓடிவிட்டான் என்று தெரிந்தால் வருத்தப்படுவார் என்று அவரது நெருங்கிய நண்பரான சிவாஜி நினைப்பார். எனவே அவர் விஜயகுமாரின் கணவராகவே நடிப்பார். ஒரு கட்டத்தில் விஜயகுமாரிக்கு அறுவை சிகிச்சை செய்து கண்பார்வை சரியாகிவிடும். அப்போது விஜயகுமாரி, சிவாஜி கணேசனை பார்த்து அவர்தான் தன்னுடைய கணவர் என்று நினைத்துக் கொள்வார்.

சிவாஜி கணேசன் ஒரு பக்கம் தேவிகாவை காதலித்துக் கொண்டிருக்கும் நிலையில் மறுபக்கம் எஸ்.எஸ். ராஜேந்திரனை கண்டுபிடித்து விஜயகுமாரியுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று பாடுபடுவார். ஆனால் விஜயகுமாரி தனக்கு தாலி கட்டிய கணவன் சிவாஜி கணேசன் தான் என்று நினைத்துக் கொண்டு அவருடன் வாழ முயற்சி செய்வார். இதனால் சிவாஜி கணேசன் தர்மசங்கடத்தில் இருப்பார்.

இந்த நிலையில் திடீரென எஸ்.எஸ். ராஜேந்திரன் வீட்டுக்கு வர அதன் பின் கிளைமாக்ஸில் என்ன நடந்தது என்பது ஒரு ட்விஸ்ட். இந்த படம் மிகவும் அற்புதமாக படமாக்கப்பட்டு இருக்கும் என்பதும் சிறிது தவறினால் கூட கொச்சையாக மாறக்கூடிய வகையில் இருந்த கதையை மிகவும் நேர்த்தியாக இயக்குனர் பீம்சிங் கையாண்டிருப்பார்.

கடந்த 1965 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதுடன் சென்னை சாந்தி தியேட்டரில் அதிக வசூலை அள்ளி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த படத்திற்கு விசுவநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.

ஒரு பெண்ணின் கணவராக இன்னொருவர் நடித்திருப்பதை பார்த்து சென்சார் அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘ஏ’ சான்றிதழ் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கதையை விளக்கமாக சென்சார் அதிகாரிகளுக்கு இயக்குனர் பீம்சிங் எடுத்து கூறி ஒரு காட்சியில் கூட தவறாக இருக்காது என்பதை விளக்கி மிகவும் கஷ்டப்பட்டு தான் அவர் யூ சான்றிதழ் பெற்றதாக தகவல்கள் கூறுகின்றது.

இந்த படத்தை பார்த்த பார்வையாளர்களும் கதை மிகவும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது என்று இயக்குனர் பீம்சிங்கருக்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.