பொதுவாக ஒரு திரைப்படத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய நடிகர்கள், நடிகைகள் நடித்தால் யார் பெயரை டைட்டிலில் முதலில் போடுவது என்ற பிரச்சனை வரும். கடந்த பல ஆண்டுகளாக இந்த பிரச்சனை இருந்து வருகிறது. அப்படி ஒரு பிரச்சனைதான் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் நடித்த ‘பார்த்தால் பசி தீரும்’ என்ற படத்திற்கு வந்தது.
இந்த படத்தில் சிவாஜி கணேசன் பெயரை முதலில் போடுவது என்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் இந்த படத்தில் சாவித்திரி, சரோஜாதேவி, சௌகார் ஜானகி ஆகிய மூன்று நடிகைகள் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட மூன்று நடிகைகளுக்கும் படத்தின் கதையில் முக்கியத்துவம் இருந்ததால் யார் பெயரை முதலில் போடுவது என்ற பிரச்சனை ஏற்பட்டது.
ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல.. 17 முறை ஒரே நாளில் வெளியான சிவாஜியின் இரண்டு படங்கள்.. பெரும் சாதனை..!
சாவித்திரி மற்றும் சௌகார் ஜானகி இருவரும் சீனியர் நடிகர்கள். குறிப்பாக சாவித்திரி நடிகையர் திலகம் என்று போற்றப்படுபவர். ஆனால் அன்றைய நாளில் உச்சத்தில் இருந்தவர் சரோஜாதேவி தான். எனவே அவர் பெயர் முதலில் போட வேண்டும் என்று அவரது தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் செளகார் ஜானகியும் சாவித்திரியும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. முதலில் சாவித்திரி பெயர் அல்லது என்னுடைய பெயர் அதன் பிறகு தான் சரோஜா தேவி பெயர் என்று செளகார் ஜானகி பிடிவாதமாக இருந்தார். இது குறித்து இயக்குனர் பீம்சிங், ஏவிஎம் மெய்யப்ப செட்டியார், மூன்று நாயகிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த விதமான உடன்பாடும் ஏற்படவில்லை. படத்தின் ரிலீஸ் தேதியும் நெருங்கிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் தான் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் சமயோசிதமாக யோசித்து ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘பார்த்தால் பசி தீரும்’ என்ற டைட்டிலை அடுத்து உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும் என்று மட்டும் டைட்டில் போட்டார். அதில் எல்லோருடைய முகங்களும் உள்ள ஸ்டில் ஒன்று வெளியானது.
ஒரே டைட்டில், ஒரே கதை.. ஒரே நாளில் தனித்தனியாக விளம்பரம் கொடுத்த எம்ஜிஆர் – சிவாஜி..!
அதில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, சரோஜாதேவி, செளகார் ஜானகி, தங்கவேலு உள்பட அனைவரது முகங்களும் இருந்தன. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். அவரது இரண்டு வேட புகைப்படங்களும் இருந்தது. ஒரு வழியாக ஏவிஎம் நிறுவனம் இந்த டைட்டில் பிரச்சனையை இதன் மூலம் முடித்து வைத்தது.
அதன்பிறகு செளகார் ஜானகி உள்பட மூவருமே இனிமேல் டைட்டிலில் எந்தவித பிரச்சனையும் ஏற்படுத்த வேண்டாம், போட்டி நடிப்பில் மட்டும் தான் இருக்க வேண்டுமே தவிர முதலில் யார் பெயர் போடுவதில் என்பதில் இருக்க வேண்டாம் என்பதை முடிவு செய்தனர். அதன் பிறகு மூவருமே எந்த படத்திற்கும் டைட்டிலில் பிரச்சனையை செய்யவில்லை.
இந்த படம் கடந்த 1962ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்திற்கு விசுவநாதன் – ராமமூர்த்தி இரட்டையர்கள் இசையமைத்து இருந்தனர். அன்று ஊமைப் பெண்ணல்லோ, பார்த்தால் பசி தீரும், பிள்ளைக்கு தந்தை ஒருவன், உள்ளம் என்பது ஆமை, யாருக்கு மாப்பிள்ளை யாரோ ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.
அன்பு நடமாடும் கலைக்கூடமே… சிவாஜியின் அற்புதமான நடிப்பில் உருவான அவன்தான் மனிதன்!
பீம்சிங் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் கதையை ஏ.சி.திருலோகசந்தர் எழுதி இருந்தார். ஆரூர்தாஸ் வசனம் எழுதியிருந்தார். ‘பார்த்தால் பசி தீரும்’ ஏவிஎம் நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாகும்.