இசைக்கு மொழியில்லை என்பார்கள். வேற்றுமொழி பாடகர்கள் தமிழில் நிறைய பாடல்களைப் பாடினாலும் அதில் உண்ணிமேனன் என்றுமே சிறப்புதான். சித்ரா, ஹரிஹரன், எஸ்.பி.பி, யேசுதாஸ், உண்ணிகிருஷ்ணன் போன்ற பல வேற்றுமொழி பாடகர்கள்தான் தமிழ் சினிமாவில் ரசிகர்களைக் பாடல்களால் கட்டிப் போட வைத்தவர்கள்.
மலையாளத்தில் பாடிக்கொண்டிருந்த உண்ணிமேனனை ஏ.ஆர்.ரகுமான் ரோஜா படத்தில் புதுவெள்ளை மழையாக ரசிகர்களை இசை மழையில் நனையவிட இப்பாடல் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான், தேவா, இளையராஜா, எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ் என்று முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி ரசிகர்களை தன்பக்கம் இழுத்தார்.
சமீபத்தில் உண்ணிமேனன் பேட்டி ஒன்றில் தான் பாடிய பாடல்களில் தனது மனதுக்கு மிக நெருக்கமாக அமைந்த பாடல் என்றால் பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடல் மிகுந்த மன திருப்தியை தந்ததாகவும், நிறைய கச்சேரிகளில் அந்தப்பாடலை பாடச் சொல்லி ரிபீட்மோடில் ரசிகர்கள் கேட்டதாகவும், அந்தப் பாடலின் ரெக்கார்டிங் பணிகளின் போதே ஹிட் வரிசையில் சேரும் எனவும் கணித்ததாகக் கூறினார்.
உயிரே படத்தில் இடம்பெற்ற பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடலைக் கேட்கும் போது காதலித்த ஒவ்வொருவருக்கும் மனதில் காதலின் வலியை இசையின் வழியாக ஏ.ஆர்.ரஹ்மான் கொண்டு சேர்க்க அதற்கு உண்ணிமேனன் குரல் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கும். பாடலின் இடையில் வரும் ஹம்மிங் கேட்பவர்கள் நெஞ்சைக் காதலால் கரைய வைக்கும்.
மேலும் ஆட்டோகிராப் படத்தில் காதல் தோல்வியை எடுத்துரைக்கும் நினைவுகள் நெஞ்சில் புதைந்ததினால் பாடலும், மீண்டும் சேரனின் தவமாய் தவமிருந்து படத்தில் இடம்பெற்ற ஒருமுறைதான் ஒருமுறைதான் பாடலும் இன்றும் கண்ணீரை வரவழைக்கும் கானங்கள்.
தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பல பாடல்கள் பாட குறிப்பாக ரிதம் படத்தில் இடம்பெற்ற நதியே நதியே, புதிய முகத்தில் ‘கண்ணுக்கு மை அழகு‘, கருத்தம்மாவில் போறாளே பொண்ணுத்தாயி, காதலர் தினத்தில் என்னவிலை அழகே போன்ற பாடல்கள் ஹிட் லிஸ்ட்டில் இடம் பிடித்தன.
மேலும் ஷாஜஹான் படத்தில் மின்னலைப் பிடித்து, வேட்டையாடு விளையாடு ‘பார்த்த முதல் நாளே‘, கோகுலம் படத்தில் செவ்வந்திப் பூவெடுத்தேன், பெண்ணே நீயும் பெண்ணா போன்ற பாடல்கள் இசை ரசிகர்களை கொண்டாட வைத்தது. ஆரவாரம் இல்லாத தெளிவான உச்சரிப்புடன் ரசிகர்களைக் கவரும் இவரின் காந்தக் குரலுக்கு அடிமையான இசை ரசிகர்கள் ஏராளம்.
தற்போது லியோ படம்மூலமாக மீண்டும் டிரன்டான ஏழையின் சிரிப்பில் படத்தில் தேவா இசையில் வந்த கருகரு கருப்பாயி பாடல் உன்னிமேனன், அனுராதா ஸ்ரீராம் குரல்களில் பாடியது என்பது குறிப்பிடத்தக்கது.