கேட்போரைக் கவர்ந்து இழுக்கும் வசீகரக்குரல் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அப்படி வாய்த்தாலும் அது தனித்துவமாக இருப்பதில்லை. அந்த வகையில் இரண்டு பெருமைகளையும் பெற்றவர் தான் இசைஞானியின் தவப்புதல்வி பவதாரிணி. அவர் கல்லீரல் புற்றுநோயால் மறைந்தது திரையுலகையே சோகத்தில் ஆழ்த்திவிட்டது. அவர் கடந்து வந்த பாதையைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
இளையராஜாவின் இளைய மகள். வயது 47. மெலடி பாடல்கள் என்றால் அவருக்கு நிகர் அவர் தான். பல நாள்களாக கல்லீரல் புற்று நோய் இருந்து வந்தது. ஸ்ரீலங்காவில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார். இது திரையுலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மயில் போல பொண்ணு ஒண்ணு கிளி போல பேச்சு ஒண்ணு என்று நம்மை எல்லாம் மெய்மறக்கச் செய்த அந்த இன்னிசைக்குயில் தொடர்ந்து பாடும்போது அந்த மனசு போன இடம் தெரியல என்று நம்மை எல்லாம் மெய்மறக்கச் செய்யும். அவருடைய கணவரும் இசை அமைப்பாளர் தான். 5 மொழிகளில் இசை அமைப்பாளர்.
1984ல் மலையாளத்தில் வெளியான மைடியர் குட்டிச்சாத்தானில் களம் இறங்கினார் பவதாரிணி. 1995ல் பிரபுதேவா நடித்த ராசய்யா படம் தான் தமிழில் இவரது முதல் படம். அதில் மஸ்தானா மஸ்தானா என்ற பாடலை பாடி அசத்தினார்.
நிறைய படங்களுக்கு இசை அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 2005ல் சென்னையைச் சேர்ந்த ஆர்.சபரிராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர் பிரபல பத்திரிகையாளர் ராமச்சந்திரனின் மகன்.
சபரி ராஜ் சென்னையில் பிரபல விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வந்தாராம். பவதாரிணி பாரதி படத்தில் பாடிய மயில் போல பொண்ண ஒண்ணு பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.
2002ல் ஆங்கிலப்படம் ஒன்றிற்கு இசை அமைத்தார் பவதாரிணி. 2003ல் தெலுங்கில் வெளியான அவுனா படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்தியில் ஷில்பா ஷெட்டி நடித்த பிர்மிலேஜ் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2005ல் கன்னட படமான கியா கியாவிற்கு இசை அமைத்தார். தொடர்ந்து தமிழல் அமிர்தம், வெள்ளச்சி, இலக்கணம், போரிடப்பழகு, கள்வர்கள், மாயநதி படங்களில் இசை அமைத்தார்.
கடைசியா 2019ல் வெளியான மாயநதி படத்திற்குப் பிறகு 3 படங்களுக்கு இசை அமைக்கவும் ஒப்புக்கொண்டாராம். ஆனால் அதற்குள் இந்த இன்னிசைக்குயில் நம்மை எல்லாம் விட்டு பிரிந்து சோகக்கடலில் ஆழ்த்தி விட்டது.