வாலிக்கும் சில்லுனு ஒரு காதல் டைரக்டருக்கும் வந்த சண்டை.. முன்பே வா பாடல் ஹிட்டாக காரணமே அந்த மோதலா?

By Ajith V

Published:

சிங்கம் உள்ளிட்ட பல கமர்சியல் திரைப்படங்களில் நடிகர் சூர்யா நடித்திருந்தாலும் அவரது ஒரு சில காதல் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் என்றுமே வரவேற்பை பெறக்கூடியவை. ஆய்த எழுத்து திரைப்படத்தில் ஒரு அரசியல் களத்தில் சாதிக்க துடிக்கும் நாயகனாக வந்திருந்தாலும் அதில் அவரது காதல் காட்சிகள் மிகப் பிரபலம்.

அதேபோல தான் வாரணம் ஆயிரம், சில்லுனு ஒரு காதல் என சூர்யாவின் காதல் திரைப்படங்கள் என்றென்றைக்கும் எவர்கிரீன் வகையில் அமைந்திருக்கக் கூடியவை ஆகும். இதில் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் மூலம் தான் கிருஷ்ணா என்பவர் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். மிக அழகாக கல்லூரி களத்தில் காதல் கதையை அமைத்து அந்த சமயத்தில் பல இளைஞர்களை காதல் வலையில் கிறங்கடிக்க வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை, ஹிப்பி, பத்து தல உள்ளிட்ட திரைப்படங்களை கிருஷ்ணா இயக்கியிருந்தாலும் அவரது இயக்கத்தில் சில்லுனு ஒரு காதல் தான் பலரது ஃ பேவரைட். அதுவும் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில் முன்பே வா என்ற பாடல் அந்த சமயத்தில் பல இளைஞர்கள் முணுமுணுத்த பாடலும் ஆகும்.

இந்நிலையில் இந்த பாடல் உருவானதன் பின்னால் உள்ள மோதல் பற்றி இயக்குனர் கிருஷ்ணா ஒரு நேர்காணலில் தெரிவித்த தகவலை பற்றி தற்போது பார்க்கலாம். முன்பே வா பாடலை வாலி எழுத அவரை சந்தித்த சமயத்தில் நடந்த சம்பவம் பற்றி கிருஷ்ணா பேசுகையில், “வாலி சாருடன் என்னுடைய முதல் சந்திப்பே மோதலில் தான் ஆரம்பித்தது. ‘நான் எத்தனை காதல் பாடல் எழுதிருக்கேன் தெரியுமா உனக்கு’ என்று வாலி என்னிடம் கேட்டார்.

நான் கொஞ்சம் அவசரப்பட்டு, ‘சரி தான் சார். நீங்கள் நிறைய காதல் பாடல்கள் எழுதியவர் தான். ஆனால் இது என்னுடைய காதல். அது எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் தானே முடிவு செய்ய வேண்டும்’ என்று கூறிவிட்டேன். நான் அப்படி சொன்னதும், ‘இது தான்யா புது டைரக்டர் கூட நான் ஒர்க் பண்றது இல்லை’ என வாலி கோபப்பட்டு எழுந்து விட்டார்.

மறுநாள் அதிகாலையில் என்னை நாலரை மணிக்கு தொடர்பு கொண்டு தூங்கிக் கொண்டிருக்கிறாரா என்று கேட்டு நான் ஆமாம் என்றதும் ‘என்னை தூங்க விடாமல் செய்துவிட்டு நீ தூங்கிக் கொண்டிருக்கிறாயா. உன்னுடைய காதல் பாடலை தயார் செய்து விட்டேன். இப்போது முடிந்தால் நிராகரித்து பார்’ என்று கூறினார். அப்படித்தான் முன்பே வா என்ற பாடல் உருவானது” என கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.