விமல் நடிப்பில், எழில் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்த திரைப்படம் தான் ‘தேசிங்கு ராஜா’. விமலுடன் பிந்து மாதவி, சூரி, ரவி மரியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த திரைப்படத்தின் காமெடி காட்சிகள் அனைத்துமே மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதே போல டி. இமானின் இசையில் உருவான பாடல்களும் கூட ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
இதனிடையே, தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இயக்குனர் எழிலின் 25 வது படமாக இது உருவாகி வரும் சூழலில், முதல் படத்தின் நாயகன் விமலே இதிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேசிங்கு ராஜா 2 படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் பிரபல இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பேசிய சில விஷயங்கள், ரசிகர்கள் மத்தியில் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிகழ்வில் பேசிய எஸ். ஏ. சந்திரசேகர், “சமீபத்தில் ஒரு படத்தை பார்த்து விட்டு அதன் இயக்குனரை அழைத்து பாராட்டி இருந்தேன். படத்தின் முதல் பாதி சூப்பராக இருந்தது. படம் எப்படி செய்வது என உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என நான் கூறியதும் பணிவாக கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் இரண்டாம் பாதி சரியாக இல்லை என நான் கூறியதும், ‘நான் சாப்பிட்டுட்டு இருக்கேன் சார். அப்புறமா கூப்பிடுறேன் சார்’ என்றபடி போனை கட் செய்து விட்டார். இரண்டாம் பாதியில், தந்தையே தனது பிள்ளைக்கு ஒரு தீங்கு செய்வது அந்த மதத்தில் இல்லை என நான் கூறியதும் போனை கட் செய்து விட்டார். நான் ரிலீசிற்கு முன்பே படத்தை பார்த்திருந்தேன். தொடர்ந்து படம் ரிலீசாகிய பின் நான் சொன்னது போல அதிகமான விமர்சனங்களையும் சந்தித்திருந்தது” என தெரிவித்துள்ளார்.
எஸ். ஏ. சந்திரசேகர் சொன்னதன் படி, மத நம்பிக்கையில் தந்தையே மகனை அல்லது மகளை கொலை செய்யும் வழக்கமில்லை என குறிப்பிட்டிருப்பார். அவர் கூறியதன் படி, சந்திரசேகரின் மகனும், நடிகருமான விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படத்தில் தான், தந்தை கதாபாத்திரத்தில் வரும் சஞ்சய் தத், மகனான விஜய் அல்லது மகள் மடோனா செபாஸ்டியனை நரபலி கொடுக்க துணிவார்.
இதனால், எஸ். ஏ. சந்திரசேகர் இரண்டாம் பாதி நன்றாக இல்லை என விமர்சித்த படம் லியோ தான் என்றும், அவர் போனில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் என்றும் ஒரு ஊகமாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.