நடிக்க வந்த முதல் வாய்ப்பையே நிராகரித்த சவுகார் ஜானகி பேத்தி.. பின்னர் முன்னணி நடிகையாக மாறியது எப்படி?..

By Bala Siva

Published:

தன்னுடைய திருமணம் முடிந்து கையில் ஒரு குழந்தை இருந்த போது நடிகையாக அறிமுகமானவர் தான் சவுகார் ஜானகி. கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக தென் இந்திய திரை உலகில் தடம் பதித்து வரும் சவுகார் ஜானகி, தற்போதும் கூட கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு நடித்து வருகிறார். அவரை பற்றி பலருக்கு தெரியும் என்றாலும் அவரது பேத்தி குறித்து நிச்சயம் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இவரது பேத்தி தான் நடிகை வைஷ்ணவி.

’தலைவனுக்கோர் தலைவி’ என்ற திரைப்படத்தில் தான் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு என் தங்கை, சந்தன காற்று, புலன்விசாரணை, ஒரு வீடு இரு வாசல், சேலம் விஷ்ணு, வா அருகில் வா, தர்மதுரை, இதயவாசல், மாநகர காவல், அண்ணாமலை உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவான ரோஜா திரைப்படத்தில் நாயகி மதுபாலாவின் சகோதரியாக இவர் நடித்திருப்பார். மேலும் தலைவாசல், உத்தமராசா, நாட்டாமை உள்பட பல படங்களில் நடித்திருந்தார். நாட்டாமை படத்தில் வில்லன் பொன்னம்பலம் மனைவியாக நடித்திருந்தார்.

1987 ஆம் ஆண்டு நடிப்புத் துறைக்கு வந்த வைஷ்ணவி 1996 வரை பல படங்களில் நடித்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் அவர் கிட்டத்தட்ட திரையுலகில் இருந்து விலகி விட்டார். பிரபல ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்ட நிலையில், அதன் பின்னர் திரைப்படங்களில் அவர் கவனம் செலுத்தவில்லை.

vaishnavi1

நடிகை வைஷ்ணவி ஊரறிந்த ரகசியம், கோட்டைபுரத்து வீடு, ஆதிபராசக்தி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ள அவர், சில படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார். குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘திருடா திருடா’ என்ற படத்தில் அனு அகர்வால் கேரக்டருக்கு டப்பிங் குரல் கொடுத்திருந்தார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு மாதவன் இயக்கிய ’ராக்கெட்டரி’ என்ற திரைப்படத்தில் அவர் சிம்ரனுக்கு குரல் கொடுத்திருந்தார். சினிமாவிலிருந்து விலகி நீண்ட ஆண்டுகள் கழித்து மாதவன் தன்னை டப்பிங் ஆபீஸ் பணிக்கு கூப்பிட்டபோது மாறுபட்ட உணர்வுடன் தான் மும்பை சென்றேன் என்றும் என்னை நார்மல் மோடுக்கு கொண்டு வந்த பிறகுதான் என்னை டப்பிங் செய்ய வைத்தார் இயக்குனர் மாதவன் என்றும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் தனக்கு நடிப்பில் விருப்பமில்லை என்றும் ’தலைவனுக்கோர் தலைவி’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த பிறகு முடியாது என்று தான் கூறியதாகவும் ஆனால் தேடி வந்த வாய்ப்பை நிராகரிக்க கூடாது என தனது பாட்டி கூறியதற்காக தான் நடிக்க சம்மதித்தேன் என்றும் அதன் பிறகு யோசிக்கக்கூட நேரமில்லாமல் நிறைய வாய்ப்புகள் வந்தது என்றும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் எனக்கு அழுகையான கேரக்டர் வந்தால் பிடிக்காது என்றும் அழுகையான கேரக்டரில் நடிப்பதை பார்த்து இப்போது கூட நான் சிரித்துக் கொண்டிருப்பேன் என்றும் என் மகள்கள் கூட நீயாம்மா இப்படி எல்லாம் நடிச்ச என்ற கிண்டல் பண்ணுவார்கள் என்று தெரிவித்தார். தான் நடித்த படத்தில் ’ஒரு வீடு இரு வாசல்’ மிகவும் பிடித்த படம், பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான இந்த படம் இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். நடிகர் மாதவன், வைஷ்ணவியின் குடும்ப நண்பர் என்பதால் தான் ராக்கெட்டரி படத்தில் பணியாற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.