பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் அடுத்த படமான தலைவர் 171 டீசர் இன்று வெளியாகி சூப்பர் ஸ்டார் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. கைதி மூலம் தமிழ் சினிமாவினை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்தி அடுத்தடுத்து கமலுக்கு விக்ரம், விஜய்க்கு லியோ, மாஸ்டர் என அதிரடி ஆக்சன் படங்களைக் கொடுத்து இந்திய சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநராக மாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் இன்று டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது.
தற்போது ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவரும் ரஜினி இந்த வருட தீபாவளியை ஒட்டி படத்தினை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து தலைவர் 171 படத்திற்கு ரஜினிகாந்த் தயாராகி வருகிறார். வழக்கமான லோகேஷ் கனகராஜின் பார்ஃமுலா டீசரிலேயே தெரிகிறது. ‘கூலி’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
லோகேஷ் கனகராஜின் ஆஸ்தான சண்டைப் பயிற்சி மாஸ்டர்களான அன்பறிவு அதிரடியில் தங்கம் கடத்தல் பின்னனியில் டீசர் உருவாகியுள்ளது. ஏற்கனவே சரத்குமார் நடிப்பில் வெளிவந்துள்ள கூலி பட தலைப்பையே தலைவர் 171 படத்திற்கும் வைத்துள்ளார்கள். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தில் ரஜினி தான் நடித்த ரங்கா படத்தில் வரும் வசனத்தைக் கூறுகிறார்.
அதில் “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் தப்பெண்ண சரியென்ன எப்போதும் விளையாடு, அடப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே, எப்பாதை போனாலும் இன்பத்தைத் தள்ளாதே” என்று வில்லன்களை துவம்சம் செய்து கொண்டே அவர் கூறும் இந்த வசனங்களிலேயே மாஸ் தெரிகிறது.
தனது முந்தைய படங்களில் போதைப் பொருள் கடத்தலை மையப்படுத்தி கதைக்களம் அமைத்திருந்த லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தில் தங்கக் கடத்தலை கையில் எடுத்துள்ளார். இப்படி உலக மாபியாக்களின் கதைக் களத்தை எடுத்து இண்டர்நேஷனல் அளவில் நடக்கும் கொள்ளையை வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் ‘கூலி’யும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
மேலும் டீசரில் ஒரு அறைக் கதவை திறக்கும் போது அதில் 171 என்று எண் எழுதப்பட்டிருக்கும். இது ரஜினியின் 171-வது படத்தினைக் குறிக்கிறது. மேலும் LCU குறியீடுகள் எதுவும் தென்படவில்லை என்பதால் இது முற்றிலும் மாறுபட்ட கதையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரலில் படம் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.