ரஜினி தம்பியாக நடித்து 80களில் பிரபலமான நடிகர்.. இவரோட மகனும் ஒரு பெரிய நடிகரா?

By Bala Siva

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ’படிக்காதவன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் ரஜினியின் சகோதரராக நடித்தவர் நடிகர் விஜய் பாபு. ரஜினி, சிவாஜி என நடிப்பின் இரு பெரும் துருவங்கள் இருக்க, அவர்களுக்கு இணையான நடிப்பையும் விஜய் பாபு வெளிப்படுத்தி இருப்பார் .

இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து பெயர் எடுத்த சூழலில், கடந்த எண்பதுகளில் வெற்றிகரமான நடிகராகவும் வலம் வந்திருந்தார். நடிகர் விஜய் பாபு ஆந்திராவை சேர்ந்தவர். ’ஒரு வீடு ஒரு உலகம்’ என்ற திரைப்படத்தில் தான் இவர் நடிகராக கடந்த 1978 ஆம் ஆண்டு அறிமுகமானார். துரை இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய் பாபு, முரளி என்ற கேரக்டரில் நடித்திருப்பார் என்பதும் இந்த படத்தின் நாயகனாக ஸ்ரீகாந்த் மற்றும் நாயகியாக ஷோபா நடித்திருந்தனர்.

முதல் படத்திலேயே அவருக்கு நல்ல கேரக்டர் கிடைத்ததால் இதனையடுத்து அவருக்கு ’ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திலும் ஷோபா நாயகியாக நடித்திருந்தார்.

vijaybabu1

இதனைத் தொடர்ந்து அவர் ’ஒரு கோயில் இரு தீபங்கள்’ ’ஸ்ரீதேவி’ ’குமரிப்பெண்ணின் உள்ளத்திலே’ ’மாதவி வந்தாள்’ ’பருவத்தின் வாசலிலே’ ’மீனாட்சி’ ’முயலுக்கு மூன்று கால்’ போன்ற படங்களில் நடித்தார். இவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுக் கொடுத்த திரைப்படம் என்றால் அது ’முயலுக்கு மூணு கால்’ என்று சொல்லலாம். சரிதா, சுதாகர் நடித்த இந்த படம்  சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து அவர் ’பௌர்ணமி நிலவில்’ ’எங்கள் வாத்தியார்’  ’வேலி தாண்டாத வெள்ளாடு’ ’கடவுளின் தீர்ப்பு’ ’மீண்டும் சந்திப்போம்’ ’எங்கம்மா மகராணி’ போன்ற படங்களில் நடித்தார்.

கடந்த 1985 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ’படிக்காதவன்’ என்ற திரைப்படத்தில் ரஜினியின் சகோதரராக நடித்திருந்த விஜய் பாபு, அப்பாவி மற்றும் சிறிய வில்லத்தனமான கதாபாத்திரம் என கலந்து நடித்து மிகப்பெரிய அளவில் அந்த காலத்திலேயே பிரபலமானார்.

இந்த படத்தை அடுத்து ஒரு சில வாய்ப்புகள் வந்தாலும் அவர் திரையுலகிற்கு நீண்ட இடைவெளி விட்டுவிட்டார். அதன் பிறகு 1990 ஆம் ஆண்டு இரண்டு படங்களில் நடித்தாலும் 20 வருடங்கள் கழித்து தான் அடுத்த படத்தில் நடித்தார். தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் என்ற திரைப்படத்தில் விஜய் பாபு, ராகவன் என்ற கேரக்டரில் நடித்தார். இதன் பின்னர் விஷால் நடித்த சக்ரா திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மலையாளத்திலும் ஒரு சில படங்கள் நடித்துள்ள நிலையில், தொலைக்காட்சி தொடர்கள் மூலமாகவும் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார் விஜய் பாபு. சன் டிவியில் ஒளிபரப்பான வரம், ஆனந்தம் மற்றும் பூவா தலையா ஆகிய சீரியல்களிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா என்ற சீரியலிலும் நடித்திருக்கிறார். நடிகர் விஜய் பாபுவின் மகன் ரமணா ஒரு சில படங்களில் நடித்து வரும் சூழலில் இவர் விஷாலின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.