ரஜினியின் சினிமா வாழ்க்கையில் பாட்ஷாவிற்கு முந்தைய அதிக வசூல் திரைப்படமாக பெரும்வெற்றி பெற்ற திரைப்படம் தான் அண்ணாமலை. கவிதாலயா புரடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இந்தப் படத்தினை இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்கு சுரேஷ் கிருஷ்ணாவிற்கு முன் இயக்க ஒப்பந்தமானவர் இயக்குநர் வசந்த். பின் சில காரணங்களால் அவர் இயக்க முடியாமல் போனது.
எனினும் படம் 1992-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ரஜினியின் பக்கவான கமர்ஷியல் படமாக இது உருவெடுத்தது. அப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஆட்சி வந்தமையால் போஸ்டர்கள் ஒட்டுவது அப்போது தடையில் இருந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. எதிர்பார்ப்பினை நிறைவு செய்யும் வகையில் படம் ரிலீசாகி பட்டிதொட்டியெங்கும் வெற்றி பெற்றது.
ரஜினிகாந்த், குஷ்பு, சரத்பாபு, மனோராமா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் மூலமாகவே சூப்பர் ஸ்டார் ரஜினி என்னும் தீம் மியூசிக்கை இசையமைப்பாளர் தேவா உருவாக்கினார். இதனால் அடுத்தடுத்து வந்த படங்களில் இந்த இசையைப் பயன்படுத்த அந்த தீம் ரஜினியின் லோகோவாகவே மாறிப் போனது. கிட்டத்தட்ட 175 நாட்கள் படம் திரையரங்குகளில் ஓடி மாபெரும் சாதனை படைத்தது.
இப்படத்திற்கான பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதினார். இந்தப் படத்தில் குஷ்பூவுடன் வரும் ஜோடிப்பாடல்தான் கொண்டையில் தாழ்ம்பூ… நெஞ்சிலே வாழைப்பூ.. கூடையில் என்ன பூ.. குஷ்பூ.. என் குஷ்பூ என்ற பாடல். இந்தப் பாடல் அப்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. காரணம் பாடலில் இடம்பெறும் குஷ்பூ என்ற அவரின் பெயராலேயே பாடலை எழுதியிருந்தார் வைரமுத்து.
இந்தப் பாடலின் வரிகளை படித்துப் பார்த்த இயக்குநரும், தேவாவும் குஷ்பூவின் பெயரைப் போடலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தனர். இவர்களின் யோசனையை அறிந்த ரஜினி என்னவென்று விசாரித்திருக்கிறார். வைரமுத்து எழுதிய இந்தப் பாடலில் குஷ்பூ என்று அவர் பெயர் வருகிறது என்றவுடன் முகம் மலர்ந்து வைரமுத்துவிடம் அப்போ எனது பெயரும் பாடலில் வருமா என்று சிறு குழந்தை போல் ஆர்வத்துடன் கேட்டுள்ளார்.
முதலில் போடலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த பாடலில் ரஜினியின் ஆர்வத்தினை அறிந்து பாடலில் அவர் பெயரையும் சேர்த்து வீரத்தில் மன்னன் நீ.. வெற்றியில் கண்ணண் நீ… என்றுமே ராஜா நீ ரஜினி.. நீ ரஜினி என்று வைரமுத்து எழுதி பாடலை நிறைவு செய்திருக்கிறார். பின்னர் இந்தப் பாடலை எஸ்.பி.பியும் சித்ராவும் பாடி ஹிட் கொடுத்தனர்.