உனக்கு நிம்மதியா தூக்கம் வருதா?… சூர்யா வாழ்க்கையையே புரட்டிப் போட்ட ரகுவரனின் கேள்வி.. அடுத்து நடந்த அதிசயம்!

இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, ஆரம்ப காலகட்டத்தில் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள சற்று சிரமப்பட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அவரது நடிப்பு மற்றும் நடனம் உள்ளிட்டவை சற்று விமர்சனங்களையும்…

Raghuvaran Suriya

இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, ஆரம்ப காலகட்டத்தில் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள சற்று சிரமப்பட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அவரது நடிப்பு மற்றும் நடனம் உள்ளிட்டவை சற்று விமர்சனங்களையும் சந்தித்து வந்தது. அப்படி இருந்தும் அதிலிருந்து தன்னை இன்று முன்னிலைப்படுத்தி அசுர வளர்ச்சிக்கு சூர்யா வளர ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது மறைந்த நடிகர் ரகுவரன் கொடுத்த அட்வைஸ்.

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன் நடிகர் யார் என பட்டியல் போட்டால் கண்ணை மூடிக் கொண்டு ரகுவரன் பெயரை சேர்த்து விடலாம். பாட்ஷா படத்தில் ரஜினிக்கு வில்லனாக, தேவாவின் பின்னணி இசையில் ஆன்டனி என ரகுவரன் தோன்றும் காட்சியை இப்போது பார்த்தாலும் ஒருவித நடுக்கம் இருக்கும். அந்த அளவுக்கு ஒரு காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கொடி கட்டி பறந்தவர் ரகுவரன். இன்னொரு பக்கம், வில்லத்தனமான நடிப்பைத் தாண்டி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் பட்டையைக் கிளப்பி இருந்தார் ரகுவரன்.

ரன், திருமலை, முகவரி, யாரடி நீ மோகினி உள்ளிட்ட திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் ரகுவரன் தோன்றிய போது இவரா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியது என தோன்றும். அந்த அளவுக்கு நடிப்பில் புதுமை காட்டிய ரகுவரன், கடந்த 2008 ஆம் ஆண்டு மறைந்தார். முன்னதாக, சூர்யாவின் நடிப்பு பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்த ரகுவரனின் அறிவுரை என்ன என்பதை பார்க்கலாம்.

சூர்யா நடித்த உயிரிலே கலந்தது என்ற திரைப்படத்தில் அவருடன் இணைந்து ரகுவரன் நடித்திருந்தார். அப்போது படப்பிடிப்பின் இடைவேளையில், சூர்யாவிடம் பேசிய ரகுவரன், ‘உனக்கு நிம்மதியாக தூக்கம் வருகிறதா. அது எப்படி எதுவும் சாதிக்காமல் தூக்கம் வரும். உனக்கான தனி அடையாளத்தை நீ உருவாக்க வேண்டும். அதுவரை உனக்கு தூக்கம் வரக்கூடாது’ என ரகுவரன் குறிப்பிட சூர்யாவுக்கு ஒரு உத்வேகமும் பிறந்துள்ளது.

இதன் பின்னர் வித்தியாசமான கதையம்சம் கொண்ட சவாலான கதாபாத்திரம் ஏற்று நடிக்க தொடங்கிய சூர்யா, மிகச் சிறந்த நடிகராகவும் மாறினார். அப்படி ரகுவரன் கொடுத்த அறிவுரை சூர்யா வாழ்க்கையையே புரட்டிப் போட்டது குறிப்பிடத்தக்கது.