மாற்று சிந்தனையும், அபார நடிப்புத் திறனும் கொண்டவர் நடிகர் எம்.ஆர் ராதா, அவரைப் போலவே திறமையில் சற்றும் குறைவில்லாதவர் அவருடைய மகள் ராதிகா. அவர் நடிகையாக ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில், பாஞ்சாலியாக அறிமுகமானார்.
அப்பா தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் பூர்வீகம் ஆந்திரா ஆகும், அவருடைய அம்மா இலங்கையைச் சேர்ந்தவர். ராதிகாவின் அம்மா, மகள் எக்காரணம் கொண்டும் சினிமா பக்கம் வந்து விடக்கூடாது. நல்லபடியாக படிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.
சென்னை, இலங்கை, லண்டன் என தொடர்ந்து பல நாடுகளை சுற்றி படித்துக் கொண்டே இருந்தார். புத்தகங்கள் மீது தனிப்பட்ட பிரியம் கொண்டவர் ராதிகா. இப்படியாக இருந்த இளம் பெண்ணை அடையாளம் கண்டவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. 16வயதினிலே மாஸ் வெற்றிக்குப்பின், நல்ல கதையம்சம் கொண்ட படத்தை இயக்க தயாரானார் பாரதிராஜா.
கதை, நடிகர்கள், பணியாளர்கள் என அனைத்தும் முடிவாகிவிட்ட நிலையில், கதாநாயகி மட்டும் முடிவாகாமல் இருந்துள்ளது. கிராமத்து பெண்ணாக நல்ல புதுமுகம் தேவையென இயக்குனர் இமயம் தேடிக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, ராதிகாவின் போட்டோவை நண்பர் ஒருவரின் வீட்டில் பார்த்ததும், பிடித்து போனது. உடனே, ராதிகாவின் வீட்டு அட்ரஸை வாங்கி கொண்டு, அவரை பார்க்க போனார். அங்கு போன பின் எம்.ஆர் ராதாவின் மகள் என்பது தெரிய வருகிறது.
ராதிகாவின் வீட்டில் நடிப்பதற்கு சம்மதம் வாங்க கொஞ்சம் பாடுபட்டு இருக்கிறார் பாரதிராஜா. ஆரம்பத்தில், மறுத்த ராதிகா பின், சினிமாவில் நடிக்க ஒத்துக் கொண்டார். பாரதிராஜா, ராதிகாவை ஹீரோயின் என அறிமுகம் செய்ததும், அப்போது அவரிடம் அசிஸ்டெண்ட் ஆக இருந்த பாக்கியராஜ், பூசணிக்காய் மாதிரி இருக்கும் இவரா ஹீரோயின் என அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
பின் அவரின் நடிப்பு திறனை பார்த்த பாக்கியராஜ் தொடர்ந்து பல படங்களில் ராதிகாவுடன் நடித்தார். அப்பாவி பெண்ணாக நடிக்க ஆரம்பித்த ராதிகா, ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பின் நல்ல திடமான பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தார் ராதிகா. ‘கிழக்குச் சீமையிலே’ படத்திற்கு பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். ‘ஜீன்ஸ்’ படத்தில் சுந்தராம்பா எனும் இவருடைய கேரக்டர் அவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்தது.
தன்னுடைய நடிப்பால், பெரிய திரை மட்டும் அல்ல, சின்ன திரையையும் கட்டி போட்டவர் ராதிகா. பல ஹிட் தொடர்கள் தன்னுடைய சொந்த நிறுவனம் மூலம் தயாரித்தும், நடித்தும் மல்டியாக இயங்கி வருபவர். இதற்கிடையில், தற்போது வரும் பெரும்பாலான படங்களில் ஹீரோவின் அம்மாவாக நடித்து வருகிறார்.
பிஸியாக இயங்கிவரும் ராதிகா சமீபத்தில் பிரெஞ்சு மொழி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். படத்தின் சூட்டிங்கிற்காக பிரான்ஸ் சென்றிருக்கும் ராதிகா அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, படத்தில் நடிப்பதற்கு தன்னை ஊக்கப்படுத்திய கணவர் சரத்குமாருக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.