நடிகர் திலகம் சிவாஜியும், பாலாஜியும் நல்ல நண்பர்கள். சிவாஜியை வைத்து பல படங்களைத் தயாரித்தவர். அவருக்கு அண்ணனாகவும் பல படங்களில் நடித்தவர்.
தயாரிப்பாளரும், நடிகருமான பாலாஜி சிவாஜியைப் பற்றிய நினைவுகளை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிவாஜி நடித்த பராசக்தி படத்திற்கு டிக்கெட் கிடைக்க 2 நாள் கியூவில் நிற்க வேண்டி இருந்தது. படத்தில் அற்புதமாக நடித்து இருந்தார். மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. அப்போது நான் நரசுஸ் ஸ்டூடியோவில் தயாரிப்பு உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டு இருந்தேன்.
ஏ.எஸ்.ஏ.சுவாமியின் துளிவிஷம் படத்திற்கு என் முதலாளி சிவாஜியை நடிக்க வைக்க முன்பதிவு செய்து விட்டார். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பராசக்தியைப் பார்த்தது முதல் அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு ரொம்பவே இருந்தது. அவரிடம் நரசு எங்களை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பெரிய நடிகர் போல நடந்துகொள்ளவில்லை.
எனக்கும் நடிப்பின் மீது ஆர்வம் என்றதும் எனக்காக சின்ன ரோலைத் தரும்படி இயக்குனரிடம் கேட்டு வாங்கித் தந்தார். 1952லேயே சிவாஜி எனக்கு அறிமுகம். ஆனால் 1954 முதல் 1960 வரை அவருடன் தொடர்பு இல்லை. 1960ல் படித்தால் மட்டும் போதுமா படத்தில் சிவாஜியின் அண்ணனாக நடிக்க ஜெமினிகணேசனைக் கேட்டனர். அவருக்கு அந்தப் படத்தில் நடிக்க ஆர்வமில்லை. அதனால் அவர் என்னை நடிக்கச் சொன்னார்.
6 வருட இடைவெளிக்குப் பிறகு எனக்கு சிவாஜியுடன் நடிப்பதால் அவரிடம் என்னை மீண்டும் அறிமுகப்படுத்திக் கொண்டேன். எனக்கு உன்னை நல்லாவே தெரியும் என்றார். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவாஜி 2வது கதாநாயகன் என்றால் என்னையே பரிந்துரைத்தார். நான் தயாரித்த முதல் படம் ஜெமினிகணேசன் உடையது. 2வது படம் தங்கை. அது சிவாஜி நடித்த படம். இது ஒரு ஆக்ஷன் படம்.
இதன்பிறகு சிவாஜி சண்டைக்காட்சிகளில் புகழ்பெற ஆரம்பித்தார். ஒவ்வொரு ஷாட்டுக்குப் பிறகும் நான் நல்லா நடிக்கிறேனா என கேட்பார். அப்புறம் சில காட்சிகளில் எனக்கு நடிப்பு பிடிக்கலைனா சொல்லி விடுவேன். அதன்பிறகு பாலாஜிக்கு என்னோட நடிப்பு பிடிக்கல போலன்னு திரும்பவும் நடிச்சிக் கொடுப்பார். சிவாஜியை வைத்து எடுத்த 16 படங்களும் வெற்றி பெற்றவை.
அவர் எனக்காக வருடத்திற்கு 2 படங்கள் செய்வார். கமல், ரஜினியை வைத்தும் படம் தயாரித்தேன். என் மனைவி இறந்தபோது என் பக்கத்தில் இருந்து எனக்கு தைரியம் கொடுத்தார். அவர் இறப்பதற்கு 2 நாளுக்கு முன்பு கூட போய் பார்த்து அவருக்கு தைரியம் சொன்னேன். அப்போது ‘நீ இப்ப வண்டியை ஓட்டுறீயா”ன்னு கேட்டார்.
அவரு அப்படி ஏன் கேட்டாருன்னா எனக்கு கிட்னி ஆபரேஷன் 2 தடவை பண்ணிருக்காங்க. வண்டியை ஓட்டக்கூடாதுன்னு எங்கிட்ட முன்னாடியே சொல்லி இருந்தார். அதை மனசுல வச்சிக்கிட்டுத் தான் அப்படி கேட்டார். அதை ஞாபகம் வச்சிக்கிட்டு அந்த நேரத்துல கூட எங்கிட்ட அப்படி சொன்ன போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.