தமிழ் சினிமாவில் பிடித்த கவிஞர்கள் பெயரை பட்டியல் போட சொன்னால் பாதி பேர் கவிஞர் கண்ணதாசன் பெயரை சொன்னால் இன்னும் பாதி பேர் நிச்சயம் கவிஞர் வாலியின் பெயரையும் சொல்வார்கள். அப்படி பல தலைமுறைகளை கடந்து தனது வரிகளால் ரசிகர்களை கட்டிப் போட்டு வந்தார் வாலி. 1960 களின் போது திரைப்படங்களில் பாடல்கள் எழுத தொடங்கிய வாலி, ஏறக்குறைய 55 ஆண்டுகள் கவிஞராக மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார்.
அந்த காலத்து இசையமைப்பாளர்கள் தொடங்கி இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி. பிரகாஷ் குமார், அனிருத் என இந்த காலத்து இசையமைப்பாளர்கள் இணைந்து பணிபுரிந்ததுடன் மட்டுமில்லாமல், காலத்திற்கேற்ப வகையில் தனது வரிகளிலும், அனைவரும் ரசிக்கும்படியாக தன்னை அப்டேட் செய்து வரிகள் கொடுத்து அனைவரையும் கட்டிப் போட்டு வந்தார் வாலி.
அப்படிப்பட்ட வாலியை பிடிக்காது என ஒருவர் சொல்வதே மிக மிக அரிதான விஷயமாக தான் இருக்கும். ஒரு வேளை கண்ணதாசன் அல்லது வாலியா என கேட்டால் மட்டும் வாலியின் பெயரை சிலர் சொல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரை பிடித்தமில்லை என சொல்வது அரிதாகவே இருக்கும் நிலையில், பிரபல இசையமைப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், கவிஞர் வாலி பற்றி பேசிய கருத்துக்கள் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி ஒரு நேர்காணலில் பேசி இருந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், “என்னுடைய தனிப்பட்ட விதத்தில் வாலி ஒரு கவிஞராக ஏற்புடையவர் அல்ல. மிகப்பெரிய பாடல்களை எழுதிய உயர்ந்த கவிஞர். நான் அதை மாற்ற போவது இல்லை. அதை மறுக்கவும் மாட்டேன். எனக்கு அவரை கவிஞராக பிடிக்கவே பிடிக்காது.
அதற்கு காரணம், அவர் காசு காசு என எப்போதும் பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்காமல் போய் விட்டது. எல்லாரும் காசுக்காக தான் வேலை செய்கிறார்கள். எல்லாமே ஒரு தொழில் தானே. அதை எதற்கு கொச்சையாக வெளியில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் தான் அவர் மீது எனக்கு ரொம்ப வருத்தம் இருந்தது.
‘ரஹ்மான் நீ மெட்டை போடு, என் பையில் துட்டை போடு’ என வாலி சொல்லி இருப்பார். எதற்காக அதை போய் மேடையில் எல்லாம் பேச வேண்டும். அப்படி அவர் செய்தது அசிங்கமாக இருந்தது. இதனால், அவர் கவிதைகளையும், பாடல் வரிகளையும் ரசிப்பது அந்நியமாக போய் விடுகிறது. அப்படி என்றால் காசுக்காக என்ன வேண்டுமானாலும் எழுத வேண்டும் என்ற என்ன வருகிறது அல்லவா” என ஒரு நேர்காணலில் ஜேம்ஸ் வசந்தன் பேசி உள்ளார்.