தமிழ் சினிமாவை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆண்டதை போல எந்த நடிகரும் ஆண்டதில்லை என தைரியமாக சொல்லலாம். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சுமார் பத்து ஆண்டுகள் கழித்து தான் முன்னணி கதாநாயகனாகும் வாய்ப்பும் எம்ஜிஆருக்கு கிடைத்தது.
இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட நடிகர் எம்ஜிஆர், மக்கள் மனதை கொள்ளையடிக்கும் வகையிலான எக்கச்சக்க திரைப்படங்களிலும் நடித்து அசத்தியிருந்தார். எம்ஜிஆர் நடிக்கும் திரைப்படங்கள் மக்களை எளிதில் கவரக்கூடிய மிக முக்கிய காரணம், படத்தில் மக்களுக்கான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நாயகன் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதால் தான். மக்கள் மத்தியில் ஒரு தலைவராகவும் மாறி இருந்த எம்ஜிஆர், சினிமாவைத் தாண்டி மெல்ல மெல்ல அரசியலலிலும் நுழைந்தார்.
அங்கே ரியல் ஹீரோவாக மாறி இருந்த எம்ஜிஆர், தமிழகத்தின் முதலமைச்சராக மாறி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வந்தார். இனி எம்ஜிஆரை போல ஒரு அரசியல் தலைவரையோ, முதல்வரையோ இனி தமிழகம் பார்த்து விடாது என இன்றளவிலும் பலர் மார்தட்டி வரும் சூழலில், அந்த அளவுக்கு மக்களோடு மக்களாக கலந்து வாழ்ந்து மறைந்தார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.
கடந்த 1987 ஆம் ஆண்டு, டிசம்பர் 24 ஆம் தேதி எம்ஜிஆர் மறைந்த சூழலில், தமிழகமே அவருக்காக கண்ணீர் சிந்தி பிரியா விடை கொடுத்தது. மேலும், அவ்வப்போது எம்ஜிஆர் மறைவதற்கு முன்பாக அவரை சுற்றி நடந்த பல சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளிவருவதை நாம் அதிகம் கவனத்திருப்போம். அந்த வகையில், எம்ஜிஆர் மறைவதற்கு 10 நாட்கள் முன்பு நடந்த சம்பவம் குறித்த தகவலும் கிடைத்துள்ளது.
எம்ஜிஆருடன் இணைந்து நினைத்ததை முடிப்பவன், உரிமைக்குரல், உலகம் சுற்றும் வாலிபன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளவர் நடிகை லதா. எம்ஜிஆருடன் இணைந்து நடித்த நடிகைகளில் மிக முக்கியமான நடிகையாகவும் அவர் திகழ்ந்திருந்தார். இதனிடையே, எம்ஜிஆர் இறப்பதற்கு சரியாக பத்து நாட்கள் முன்பு நடந்த சம்பவம் பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
“உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த எம்ஜிஆரை நான் பார்க்க சென்றிருந்தேன். என்னை பார்த்ததும் அந்த வலியில் கூட எழுந்து உட்கார முயற்சி செய்தார். ஒரு இரண்டு நிமிடம் ஆனதும் எனக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது. உடனடியாக, ஏசியை ஆன் செய்யும்படி தனது அசிஸ்டன்டிடம் எம்ஜிஆர் கூறினார். அவருக்கு பேச முடியவில்லை என்ற போதும் எனக்காக தன்னை வருத்திக் கொண்டார். அவரது உடல்நிலை குறித்து விசாரித்து தெரிந்து கொண்டேன். ஒரு மணி நேரம் நாங்கள் பேசினோம். நீங்கள் சிறந்த முறையில் நலமாகி வரவேண்டும் என எம்ஜிஆரிடம் கூறிவிட்டு வந்தேன். அடுத்த பத்து நாட்கள் கழித்து தான் எம்ஜிஆர் மறைந்து விட்டதாக எனக்கு தகவல் வந்தது” என நடிகை லதா பிரபல பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.