தமிழ் சினிமா கண்ட மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் பாலச்சந்தர். இவரது திரைப்படங்களில் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டுமென பலர் அந்த காலத்தில் கனவு கண்ட நிலையில், அவரின் பட நிறுவனத்தில் ஆஸ்தான நடிகராக இருந்தவர் தான் பூவிலங்கு மோகன்.
நாடக உலகில் 2500 க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்த இவர், பூவிலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் அவர் பிரபலமானதால் அந்த பெயரும் அவரது நிஜ பெயருடன் இணைந்து கொண்டது. நாடகம், தொலைக்காட்சி திரைப்படங்கள் என பல்வேறு விதங்களில் அவர் நடித்துள்ளார். பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான தண்ணீர் தண்ணீர் என்ற திரைப்படத்தில் தான் ஒரு சிறு கேரக்டரில் மோகன் அறிமுகம் ஆனார்.
அதன் பிறகு பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான பொய்க்கால் குதிரை படத்தில் நடித்த அவர் பாலச்சந்தர் தயாரிப்பில் உருவான பூவிலங்கு என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை அமீர்ஜான் இயக்கியிருந்தார் இந்த படத்தில் மோகன், செந்தில் என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்ததை அடுத்து அவருக்கு பூவிலங்கு மோகன் என்ற பெயரும் உருவானது.
இந்த படம் பெற்ற வெற்றி காரணமாக தொடர்ந்து பல படங்களில் அவர் நடிக்க வாய்ப்பு பெற்றார். குறிப்பாக புதியவன், பகல் நிலவு, புன்னகை மன்னன், குடும்பம் ஒரு கோயில், கல்யாண அகதிகள், வானமே எல்லை போன்ற பெரும்பாலான பாலச்சந்தர் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் பூவிலங்கு மோகன். சரத்குமார் நடித்த வேடன் என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த அவர் நினைவிருக்கும் வரை என்ற படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்தார்.
அதன் பிறகு அஜித் நடித்த அமர்க்களம் என்ற திரைப்படத்தில் டிசிபி கேரக்டரில் நடித்திருந்தார். தொடர்ந்து ஏழையின் சிரிப்பில், கமல்ஹாசனின் ஆளவந்தான், ரஜினியின் பாபா உள்பட பல படங்களில் நடித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் ஆனந்தி என்ற படத்தில் நடித்த பின்னர் திரைப்படங்களில் நடிக்கவில்லை.
சினிமாவில் மட்டுமின்றி அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான ஏர்பஸ், ரகசியம், விடாது கருப்பு, ரமணி வெர்சஸ் ரமணி போன்ற சீரியல்களில் நடித்தார். ராஜ் டிவியில் கங்கா யமுனா சரஸ்வதி என்ற சீரியலில் கலைஞர் டிவியில் உறவுக்கு கைகொடுப்போம் என்ற சீரியலில் ஜீ தமிழில் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்தார். தற்போது அவர் ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா என்ற சீரியலில் நடித்து வருகிறார். செந்தில் ஹீரோவாக நடிக்கும் இந்த சீரியலில் தந்தை கேரக்டரில் நடித்து வருகிறார் பூவிலங்கு மோகன்.
பூவிலங்கு மோகன் தற்போது தற்போது பிஸியான ஒரு நடிகராக தொலைக்காட்சியில் உள்ளதால் பல வாய்ப்புகளும் அவருக்கு தொடர்ச்சியாக கிடைத்து வருகிறது. மோகன் கிட்டத்தட்ட 2500 க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். நாடக உலகில் அவரது குருநாதர் என்றால் கோமல் சுவாமிநாதன் என்று சொல்லலாம். அவரது நாடகங்களில் தான் மோகன் அதிகம் நடித்துள்ளார். ஒரு மாதத்தில் அவர் 35 நாடகங்களில் நடித்த அனுபவங்கள் உண்டு.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும், இயக்குனர் பாலச்சந்தரையும் தனது இரண்டு குருவாக ஏற்றுக் கொண்டவர் மோகன். முன்னதாக தண்ணீர் தண்ணீர் திரைப்படம் சினிமாவாக ஆகும் முன்பே நாடகமாக நடந்த போது அதில் பூவிலங்கு மோகன் தான் ஹீரோவாக நடித்தார். ஆனால் தண்ணீர் தண்ணீர் திரைப்படமாக உருவாகும் போது சரிதா தான் நாயகி என்று கே. பாலச்சந்தர் முடிவு செய்தார். சரிதாவுக்கு பொருத்தமாக இருக்க மாட்டார் என்பதால் தான் அவர் ராதாரவியை நாயகனாக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.