‘பூவே உனக்காக’ படம் தளபதி விஜய் மற்றும் சங்கீதா இருவக்குமே முக்கியமான படம். அந்தப்படத்தின் ஹீரோயின் சங்கீதா, விஜய் மற்றும் சார்லியை படாய்படுத்தும் காட்சிகளை பார்த்தால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது.
நிர்மலா மேரி எனும் அவருடைய கதாபாத்திரம் திரைக்கதைக்கு நல்ல பலமாக அமைந்திருக்கும் படு ஜாலியாக படத்தை நகர்த்தி கொண்டு போய் இருப்பார்கள். இந்தப் படத்திற்கு விஜய், சங்கீதா காம்போ பெரிதாக பேசப்பட்டது.
விஜய்க்கும் சங்கீதாவுக்கும் திருமணம் என செய்திகள் வந்ததும், பூவே உனக்காக சங்கீதாவைதான் விஜய் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என வதந்திகள் பரவியுள்ளன. பின்னர், தளபதியின் மனைவி லண்டனில் இருந்த வேறு சங்கீதா என்று தெரியவந்தது. பார்ப்பதற்கு துறுதுறுவென இருக்கும் சங்கீதா இயல்பில், மிக அமைதியான சுபாவம் கொண்டவர்.
குழந்தை நட்சத்திரமாக மலையாள படத்தில் அறிமுகம் ஆனார். தமிழில் குழந்தை நட்சத்திரமாக, என் ரத்தத்தின் ரத்தமே எனும் படத்தில் நடித்தார். இந்திப்படமான மிஸ்டர் இந்தியாவின் ரீமேக்தான் ‘என் ரத்தத்தின் ரத்தமே’ பாக்யராஜ், மீனாட்சி சேஷாத்ரியுடன் சங்கீதாவும் நடித்திருப்பார். கதாநாயகியாக 1995ம் ஆண்டு ராஜ்கிரணின் ‘எல்லாமே என் ராசாதான்’ படத்தில் அறிமுகமானார்.
ஒரே வருடத்தில் வெளியான வள்ளல் மற்றும் ‘கங்கா கெளரி’ படங்கள் சங்கீதாவிற்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தன. இந்த இரண்டு படங்களிலும் துருதுருவென இருக்கும் பெண் தான் கதையின் முக்கிய அம்சம். இருப்பினும், ஒரு படத்தில் கதாநாயகி, மற்றொரு படத்தில் சத்யராஜிற்கு மகள். இரண்டுமே நல்ல வலுவான கதாபாத்திரம்.
‘கங்கா கெளரி’ படத்தில் அருண் விஜய், வடிவேலு, திண்டுக்கல் லியோனியுடன் சங்கீதா நடித்திருப்பார். திண்டுக்கல் லியோனி நடித்த முதல் படம் ‘கங்கா கெளரி’ அவருடைய நக்கல் பேச்சும் அவரது பையன்களை சங்கீதாவுடன் இணைந்து மிரட்டுவதும் கலகலப்பாக இருக்கும். ‘வள்ளல்’ படத்தில் தந்தையை அன்பாக அதிகாரம் செய்யும் ஒரு துடுக்குதனமான மகள் கதாபாத்திரம். இந்த இரண்டு படங்களுக்குமே சங்கீதா நல்ல வித்தியாசத்தைக் காட்டியிருப்பார்.
நடிகை சங்கீதாவின் வாழ்க்கையில், பூவே உனக்காக படம் எப்படி முக்கிய திருப்பு முனையாக அமைந்ததோ அதே போல் அவருடைய வாழ்க்கை துணையும் அந்த படத்தின் மூலம்தான் கிடைத்தது. ‘பூவே உனக்காக’ படத்தின் கேமரா மேன் சரவணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
சினிமாவை விட்டு விலகி இருந்த சங்கீதா கணவர் இயக்கிய சிலம்பாட்டம் படத்தில், உதவியாளராக பணிபுரிந்தார். தன்னுடையை மகளை கவனித்து கொள்வதில் முழு கவனம் செலுத்தி வந்தார் சங்கீதா. நீண்ட இடைவெளிக்கு பின், சமீப காலமாக மீடியாக்களில் பேட்டி கொடுத்து வருகிறார்.
இதனால், அவரது ரசிகர்கள் மீண்டும் அவரை பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சினிமா வாய்ப்புகள் தொடர்ந்து வருவதாக கூறி இருக்கின்றார். நல்ல வாய்ப்பாக இருந்தால், நிச்சயம் ‘பூவே உனக்காக’ சங்கீதாவை திரையில் பார்க்கலாம்.