விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சிக்கல்கள் தமிழக அரசியலில் ஒரு விசித்திரமான சூழலை உருவாக்கியுள்ளன. படத்தின் நாயகனும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யே இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறது என்பதுதான் அரசியல் விமர்சகர்களின் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. மாணிக்கம் தாகூர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள், மத்திய அரசின் தணிக்கை வாரியம் ஒரு அரசியல் கருவியாக மாற்றப்பட்டுவிட்டதாக கூறி விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவது, திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு இந்த ஒரு படத்தை நிறுத்தி வைப்பதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறது என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். “ஒரு சாதாரண திரைப்படத்தை அதன் போக்கில் ரிலீஸ் செய்ய அனுமதித்திருந்தால், அது ஒருவேளை சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றிருக்கக்கூடும். ஆனால், இப்போது அதற்கு தணிக்கை முட்டுக்கட்டை போட்டு, ஒட்டுமொத்தத் திரையுலகத்தையும் அதன்பக்கம் திருப்பியிருப்பது, படத்திற்கு தேவையில்லாத ஒரு மிகப்பெரிய ‘ஹைப்’பை உருவாக்கிவிட்டது” என அவர்கள் கூறுகின்றனர். மொக்கையான படமாக இருந்தாலும், இத்தகைய அரசியல் நெருக்கடிகள் ஒரு படத்தை ‘சூப்பர் ஹிட்’ ஆக்கிவிடும் என்ற எதார்த்தத்தை அதிகாரிகள் உணரவில்லை.
விஜய்யின் மௌனம் என்பது ஒரு வியூகமா அல்லது அலட்சியமா என்பதும் விவாதத்திற்குரியது. தனது படத்திற்கு வரும் நெருக்கடிகளை பயன்படுத்தி தன்னை ஒரு ‘பாதிக்கப்பட்ட போராளியாக’ மக்கள் முன் காட்டிக்கொள்ள அவர் விரும்புகிறாரா என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்கள் இவ்வளவு தீவிரமாக இதில் குதிப்பதற்குக் காரணம், வரும் தேர்தலில் விஜய்யுடன் ஒரு ரகசிய கூட்டணியை உறுதிப்படுத்தி கொள்ளும் முயற்சியாக இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் கணக்கு போடுகின்றன. திமுக அமைச்சர்களோ, “இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை” என தங்களை காத்துக்கொள்ள முயல்கின்றனர்.
அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, திரையரங்குகளில் படம் வெளியாகும்போது கிடைக்கும் வரவேற்பை விட, அதற்கு முந்தைய இந்த அரசியல் சர்ச்சைகள் படத்திற்கு இலவச விளம்பரமாக மாறிவிடுகின்றன. மத்திய அரசு தேவையில்லாத வேலைகளை பார்ப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுவது, மறைமுகமாக தமிழர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு விஜய்க்கு சாதகமான அலையை உருவாக்க வழிவகை செய்கிறது. “ஒரு படத்தை முடக்க நினைப்பது, அந்த நெருப்பில் நெய்யை ஊற்றுவதற்கு சமம்” என்பதே நிதர்சனம்.
இந்த தணிக்கை சிக்கல்கள் நீடித்தால், பொங்கல் ரேஸில் ‘பராசக்தி’ தனித்து ளமாடும். ஆனால், ‘ஜனநாயகன்’ தாமதமாக வந்தாலும், இந்த அரசியல் ரீதியான அனுதாபம் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங்கை தேடித்தரும். விஜய் நேரடியாக களத்தில் இறங்காமல், மற்ற கட்சிகளை தனக்காக பேச வைத்திருப்பது அவரது அரசியல் முதிர்ச்சியா அல்லது சாமர்த்தியமா என்பதை காலம் தான் சொல்லும். 2026 தேர்தலுக்கு முன்பாக நடக்கும் இந்த போர், திரையரங்குகளுக்கு வெளியே தான் தீவிரமாக நடைபெறுகிறது.
இறுதியாக, சினிமா மற்றும் அரசியல் இரண்டையும் குழப்பிக்கொள்வது தமிழகத்திற்கு புதிதல்ல என்றாலும், ஒரு நடிகரின் கடைசிப் படத்திற்கு தேசியக் கட்சிகள் மல்லுக்கட்டுவது இதுவே முதல் முறை. “படம் ரிலீஸ் ஆனால் அது புட்டுக்கும்” என்று ஒரு தரப்பு பேசினாலும், தற்போதைய நிலவரப்படி, ஜனநாயகன் படத்தை சுற்றி நிலவும் இந்த மர்மம் மற்றும் சர்ச்சை, படத்தை தோல்வி அடைய விடாது என்றே தோன்றுகிறது. அரசியல் விமர்சகர்கள் கூறுவது போல, படத்தை சாதாரணமாக விட்டிருந்தால் அது கடந்து போயிருக்கும்; ஆனால் இப்போது அது ஒரு ‘புயலாக’ மாறியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
