சமயப் பண்டிகையை கொண்டாடுறீங்க.. தேசியப் பண்டிகையை கொண்டாட மாட்டீங்களா? கவிதையால் சுட்ட வைரமுத்து…

By John A

Published:

இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடு என்பது அனைவருக்கும் தெரியும். யாரும் எம்மதத்தையும் தழுவலாம். பின்பற்றலாம். மாறிக் கொள்ளலாம் என அடிப்படை உரிமையே உள்ளது. ஒவ்வொரு சமயப் பண்டிகையையும் இந்தியாவில் மிகக் கோலாகலமாகக் கொண்டாடுகிறோம்.

தசரா பண்டிகை, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், கோகுலாஷ்டமி, ரம்ஜான், மகாவீர் ஜெயந்தி என ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி பண்டிகைகளை மதச் சார்பின்றி அனைவரும் கொண்டாடி வரும் வேளையில் சுதந்திர தினத்தை மட்டும் இன்று வரை அரசாங்க விழாவாகவே கொண்டாடுவது குறித்து கவிஞர் வைரமுத்து தனது கவிதையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் முதல்வர் மலிவு விலை மருந்தகம்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நாட்டின் 78-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் கவிஞர் வைரமுத்து இன்று தனது எக்ஸ் பக்கத்தில் சுதந்திர தின கவிதை ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
அதில்,
ஒரு சமயப் பண்டிகையின்
கொண்டாட்டக் கூறுகள்
ஒரு தேசியத் திருவிழாவுக்கு
ஏனில்லை?

நான் அறியாமலே
இந்தக் கொண்டாட்டம்
எனக்காகவும்தான் என்ற
உரிமைப்பாடு
ஏன் உணரப்படுவதில்லை?

தேசத்தைத் தனி மனிதனும்
தனிமனிதனை தேசமும்
சுரண்டுவது ஓயும்வரை
142 கோடிக்கும்
சுதந்திரம்
பொதுவுடைமை ஆவதில்லை

அதுவரை

அது வெறும்
அரசாங்க விழாதான்
மற்றுமொரு
விடுமுறை நாள்தான்

நம்பிக்கையோடு
சொல்லிப் பழகுங்கள்
விடுதலைத் திருநாள்
வாழ்த்துக்கள்

என்று பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவில் ஒரு தேசிய விழாவினை சமய விழாக்களைப் போல் நாம் கொண்டாடுவதில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார் வைரமுத்து.

கவிஞர் வைரமுத்து ஜெய்ஹிந்த் படத்தில் இடம்பெற்ற தாயின் மணிக்கொடி, ரோஜா படத்தில் இடம்பெற்ற தமிழா தமிழா நாளை நம் வாழ்வு, இனி அச்சம் அச்சம் இல்லை.. போன்ற பல தேச பக்திப் பாடல்களையும் வைரமுத்து இயற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.