5% மட்டுமே வட்டி.. எந்த பிணையும் தேவையில்லை.. ரூ.3 லட்சம் வரை கடன்.. பிரதமரின் விஸ்வகர்மா யோஜானா திட்டம்..!

By Bala Siva

Published:

பாரத பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றத்தில் இருந்து பல்வேறு சிறப்பான திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அந்த வகையில் ஒரு சிறப்பான திட்டம்தான் பாரத பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா கடன் வழங்கும் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் படி 5% வட்டியுடன் எந்த விதமான ஆவணமும் இல்லாமல் மூன்று லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அது மட்டுமின்றி பயிற்சியில் இருக்கும் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் பிரதமர் மோடி விஸ்வகர்மா திட்டத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதன் மூலம் 30 லட்சம் தொழில் மற்றும் கைத்தொழில் செய்பவர்களுக்கு 13,000 கோடி கடன் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள் யார்? எப்படி விண்ணப்பம் செய்வது என்பதை இப்போது பார்ப்போம். இந்தியாவில் உள்ள கைவினை தொழில் மற்றும் பாரம்பரிய தொழில் செய்பவர்களுக்கு உரிய திட்டமாக இந்த பிரதமர் விஸ்வகர்மா திட்டம் அமைந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த திட்டத்தை பிரதமர் மோடி அதிகாரபூர்வமாக அறிவித்தார். விஸ்வகர்மா ஜெயந்தியுடன் செப்டம்பர் 17ஆம் தேதி மோடியின் பிறந்த நாளும் கொண்டாடுப்படுவதை அடுத்து இந்த திட்டம் அமலுக்கு வந்தது.

இந்த திட்டத்தின் படி அடுத்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்கும் என்றும் 2 லட்சம் முதல் மூன்று லட்சம் வரை வழங்கும் கடன்களுக்கு வட்டி மானியம் உண்டு என்றும் பயனாளிகள் 5% வட்டி மட்டுமே செலுத்த வேண்டும். மீதமுள்ள 8 சதவீத வட்டியை மத்திய அரசே பொறுப்பு ஏற்றுக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முதல் தவணையாக வழங்கப்படும் கடன் உதவியை 18 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும். அதன் பிறகு மேலும் 2 லட்சம் கடன் பெற்று அதை 30 மாதங்களில் திருப்பி செலுத்தி கொள்ளலாம்.

இந்த திட்டத்தால் இந்தியாவில் உள்ள கைவினை கலைஞர்கள் திறன் மேம்படும் என்றும் கைவினை கலைஞர்களுக்கு இலவச பயிற்சி ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை அதாவது 40 மணி நேரம் அளிக்கப்படும். அதேபோல் கைவினை கலைஞர்களுக்கு கருவிகள் வாங்குவதற்கு 15,000 உதவி தொகையும் வழங்கப்படும்.

இந்த திட்டத்திற்கு 18 விதமான பிரிவை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கைகள் மற்றும் கைகருவிகளை பயன்படுத்துபவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள். குறிப்பாக குயவர்கள், தச்சர்கள், படகு தயாரிப்பாளர்கள், சிலை தயாரிப்பாளர்கள், தோல் பதனிடுபவர்கள் (செருப்பு தயாரிப்பாளர்கள்), பூ மாலை தயாரிப்பாளர்கள், கன்சாலி, பொம்மைகள் தயாரிப்பாளர்கள், மீன் வலை தயாரிப்பாளர்கள், தையல்காரர்கள், கொத்தனார்கள், இரும்பு கருவிகள் தயாரிப்பாளர்கள், பிற கைவினைப்பொருட்கள் தயாரிப்பாளர்கள் கடன் பெறலாம்

இந்த திட்டத்தின் அடிப்படையில் கடன் பெற பொது சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை, ஜாதி சான்றிதழ் மற்றும் தேவையான ஆவணங்கள் இருந்தால், தகுந்த பயிற்சி முடித்தவுடன் கடன் வழங்கப்படும்.

மேலும் உங்களுக்காக...