தமிழில் சில நடிகர் மற்றும் நடிகைகள் குறிப்பிட்ட ஒரு சில படங்களில் நடித்து அதிகம் பிரபலம் அடைந்து விடுவார்கள். ஆனால், ஏதோ ஒரு சில காரணங்களின் பெயரில், அவர்கள் பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து விடுவதுடன் அவர்களை ரசிகர்களும் மறந்து விடுவதுண்டு.
அந்த வகையில், தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டுமே நடித்து பின்னர் காணாமல் போனவர் தான் நடிகர் பி சி ராமகிருஷ்ணன். இவர் ஆங்கில நாடகத்தில் மிகப்பெரிய புலமை பெற்றவர். சென்னை லயோலா கல்லூரியில் படித்த இவர், மிகச் சிறந்த நாடக நடிகர் என்பதும் அவருடைய ஆங்கில நாடகங்கள் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றது.
’தி மெட்ராஸ் பிளேயர்ஸ்’ என்ற நாடக கம்பெனியை தொடங்கி அதன் மூலம் ஆங்கில நாடகங்களை அவர் அரங்கேற்றி வந்தார். இவர் தனது பள்ளி படிப்பை கொல்கத்தாவில் படித்தாலும் லயோலா கல்லூரியில் படித்தபோது மிகப்பெரிய அளவில் நாடகத்தால் பிரபலமானார். மிருதங்க கலையை 18 வயதிலேயே பயின்ற அவர், சில காலம் தொழிலாகவும் அதனை கொண்டிருந்தார்.
லயோலா கல்லூரியில் படிப்பை முடித்த பின்னர் அகமதாபாத் ஐஐடியில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். அதன் பிறகு அவர் பல கார்ப்பரேட் கம்பெனிகள் பணிபுரிந்து வந்த அவர், 1993 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றிருந்தார்.
1969 ஆம் ஆண்டு இவர் முதல் முதலாக ஒரு ஆங்கில நாடகத்தை நடித்து இயக்கினார். சென்னையில் அரங்கேற்றப்பட்ட அந்த நாடகம் மிகப்பெரிய அளவில் பிரபலமானதையடுத்து பல ஆங்கில நாடகங்களை அரங்கேற்றினார். மேலும் ஆல் இந்தியா ரேடியோவில் இவர் பணிபுரிந்த நிலையில், இந்திய தொலைக்காட்சியில் ஆங்கில செய்தி வாசிப்பாளர்களாக இருந்தவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பி சி ராமகிருஷ்ணாவின் திறமையை அறிந்து முதன்முதலாக அவரை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் மணிரத்னம் தான். மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’திருடா திருடா’ என்ற திரைப்படத்தில் அவர் நிதி அமைச்சராக நடித்தார். 1000 கோடி ரூபாய் திடீரென தொலைந்து போன நிலையில் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை நிதி அமைச்சர் விளக்கும் இந்த படத்தில் இவருடைய கேரக்டர் சூப்பராக அமைந்திருக்கும். இந்த படத்தின் மூலம் அவர் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
‘திருடா திருடா’ வெற்றிக்கு பின்னர் 1994 ஆம் ஆண்டு வெளியான ’மே மாதம்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தில் அவர் நாயகி சோனாலி குல்கர்னியின் தந்தையாக நடித்திருந்தார். இதனை அடுத்து விஜயகாந்த் நடித்த ’கருப்பு நிலா’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். அந்த படத்தில் விஜயகாந்தின் தந்தையாக அவர் நடித்திருப்பார். செல்வநாயகம் என்ற அவரது கேரக்டர் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி இருந்தது.
இதனை அடுத்து அப்பாஸ் நடித்த ’பூச்சூடவா’ என்ற திரைப்படத்தில் நாயகி சிம்ரனின் தந்தையாக நடித்தார். கடைசியாக அவர் விஜயகாந்த் நடித்த ’உளவுத்துறை’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.
இந்த ஐந்து படங்களில் மட்டுமே நடித்த பி சி ராமகிருஷ்ணாவுக்கு அதன் பிறகும் சில படங்கள் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அவருக்கு தரப்பட்ட கேரக்டர் பிடிக்கவில்லை என்பதால் அவர் நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. ஐந்தே படங்களில் நடித்தவரை தமிழ் சினிமா அவரது திறமைக்கு ஏற்ற வேடத்தை கொடுக்காமல் அவரை பயன்படுத்த தவறி விட்டதாகவே கூறப்படுகிறது.