பராசக்தி படத்தால் கிடைத்த பாராட்டு.. ரத்தக்கண்ணீரில் கவர்ந்த பழம்பெரும் நடிகை.. கடைசி படம் வெளியான அதே ஆண்டில் நடந்த சோகம்..

By Bala Siva

Published:

பராசக்தி என்ற திரைப்படத்தின் பெயரை கேட்டவுடன் சிவாஜி கணேசன் அறிமுகமான படம் என்று அனைவரும் சொல்லிவிடுவார்கள். சிவாஜியை அடுத்து இந்த படத்தை பற்றி கூறுவதென்றால் அதில் வரும் கல்யாணி கேரக்டர் தான் அனைவரும் கூறுவார்கள். அந்த கல்யாணி கேரக்டரில் தான் ஸ்ரீ ரஞ்சனி என்ற பிரபல நாயகி நடித்திருந்தார்.

நடிகை ஸ்ரீ ரஞ்சனி தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக கடந்த 1950 – 60களில் இருந்தார். அவர் ஆந்திராவில் பிறந்திருந்தாலும் தமிழ் படங்களில் தான் அதிகம் நடித்திருந்தார். மேலும், எம்ஜிஆர், சிவாஜி உள்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1944 ஆம் ஆண்டு பீஷ்மா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் 17 வயதில் நடிகையாக அறிமுகமானார் ஸ்ரீ ரஞ்சனி. இருப்பினும் அவருக்கு மிகச் சிறந்த பெயரை பெற்றுக் கொடுத்த படம் என்றால் அது ‘பிரம்ம நர்த்தனம்’ என்ற படம் தான். 1947 ஆம் ஆண்டு வெளியான இந்த தெலுங்கு திரைப்படத்தில் அவருக்கு முக்கிய கேரக்டர் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தில் கல்யாணி என்ற கேரக்டரில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார். இதன் பின்னர் திலகம், ராஜி என் கண்மணி போன்ற படங்களில் நடித்தார். இதில் டி. ஆர். ராமச்சந்திரன் ஜோடியாக ஸ்ரீரஞ்சனி நடித்த ராஜி என் கண்மணி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும், இந்த படம் சார்லி சாப்ளின் நடித்த ‘சிட்டி லைட்ஸ்’ என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்தது.

sriranjani1

இதையடுத்து அவருக்கு பெயர் சொல்லும் வகையில் அமைந்த படம் என்றால் அது ரத்தக்கண்ணீர் படம் தான். எம் ஆர் ராதாவின் அமைதியான மனைவியாக நடித்த ஸ்ரீ ரஞ்சனியின் நடிப்புக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் குவிந்திருந்தது.

பின்னர் அவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சில படங்களில் நடித்தார். 1960 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட அவர் திரையுலகில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார். இருப்பினும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் சில தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சின்ன சின்ன கேரக்டரில் அவர் 1963 ஆம் ஆண்டு முதல் நடிக்க ஆரம்பித்தார்.  கிட்டத்தட்ட அதன் பிறகு அவர் நடித்தது எல்லாமே தெலுங்கு திரைப்படங்கள் தான்.

குறிப்பாக சம்பூர்வ ராமாயணம் என்ற திரைப்படத்தில் அவர் சுமித்ரா என்ற கேரக்டரில் நடித்து அசத்தி இருப்பார். கடந்த 1974 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்த ஸ்ரீ ரஞ்சனி, அதே ஆண்டு காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 30 வருடங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீரஞ்சனியின் நடிப்பு இன்றும் பழங்கால ரசிகர்களின் மனதில் நிற்கும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.