காலா படத்தை பிளாப் செய்ய நடந்த சதி.. இதுவரைக்கும் யாருமே பேசல.. வேதனைப்பட்ட ரஞ்சித்..

By Ajith V

Published:

அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக பா. ரஞ்சித் அறிமுகமான சமயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர போகிறார் என யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். பொதுவாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒரு சில இயக்குனர்களே திரைப்படங்கள் உருவாக்கி வந்த நிலையில், அதில் ஒருவராக அரசியல் ரீதியாக பேசி தனிப்பட்டு நின்றிருந்தார் பா. ரஞ்சித்.

மெட்ராஸ், கபாலி, காலா என ரஞ்சித் இயக்கத்தில் எந்த திரைப்படங்கள் வெளியானாலும் கொஞ்ச நாளைக்கு சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய விவாதத்தை தான் ஏற்படுத்தி இருந்தது. குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களின் வலிகளை ரஞ்சித் எடுத்து பேசும் போது அதற்கு எதிரான குரல்கள் அதிகமாக இருந்ததுடன் அவர் மீது விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால், அதை எல்லாம் கொஞ்சம் கூட காதில் போட்டுக் கொள்ளாத பா. ரஞ்சித், தொடர்ந்து தனது திரைப்படங்கள் மூலம் மிகப்பெரிய தாக்கத்தையும் சமுதாயத்தில் ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் விக்ரம் நடிப்பில், ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படம் ஒரு பக்கம் நல்ல வரவேற்பை பெற்றாலும் இன்னொரு பக்கம் இதற்கு எதிரான குரலும் அதிகமாகவே இருந்து வருகிறது.

ஆனாலும் வசூல் ரீதியாக விக்ரமிற்கு சிறந்த படமாக தங்கலான் இருந்து வரும் சூழலில், அடுத்ததாக வேட்டுவம் என்ற திரைப்படத்தையும் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஆர்யா ஆகியோரை வைத்து பா. ரஞ்சித் இயக்க உள்ளார். இதனிடையே, காலா திரைப்படம் வெளியான சமயத்தில் நடந்த சதி தொடர்பாக ரஞ்சித் தற்போது பேசிய விஷயங்கள் அதிக சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

“காலா படம் வந்த சமயத்தில் திட்டம் போட்டு சதி செய்தார்கள். அந்த படம் வெளியான நேரத்தில் நடந்த பயங்கரமான ஒரு விஷயம் என்னவென்றால் ஆர்கானிக்காக, மிக அழகாக திட்டம் போட்டு படத்தை தோல்வி அடைய செய்தது தான். அது பற்றி அப்போது யாருமே பேசவில்லை. அதை நான் இப்போது மீண்டும் பேசினால் பெரிய விவாதத்தை உண்டு பண்ணும்.

அது முழுவதும் திருப்தி அடைய வைத்த படமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை தான். ஆனால், புறக்கணிக்கப்பட வேண்டிய படமா என்று கேட்டால் இல்லை. காலா படத்தில் ரசிக்கும் வகையிலான தருணங்கள் நிறைய இருந்தது. ரசிகர்கள் நிறைய இடத்தில் தங்களை கனெக்ட் செய்து கொண்டனர். காலா படத்தை கொண்டாட ஆயிரம் காரணங்கள் உள்ளது.

ஆனால், அதனை வெறுக்க இருந்த சில காரணங்கள் மூலம் நிராகரிக்க முடியும். அதை நான் ஒரு குறையாக சொல்லவில்லை. அதே போன்று அரசியல் ரீதியாகவும் சில விஷயங்கள் திருப்தி தரும் வகையில் காலா படம் அமையவில்லை என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இனிவரும் படங்களில் அதனை புரிந்து கொண்டு சரி செய்வேன்” என பா. ரஞ்சித் கூறி உள்ளார்.