தேசிய ஒருமைப்பாட்டை மையமாகக் கொண்டு இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் படம் ஒன்றை எடுத்தார். அதன் பெயர் பாரதவிலாஸ். ரொம்ப அருமையான கதை. இதை எப்படி எடுத்தார் என்பதை அவரே சொல்கிறார் பாருங்கள்.
பாரதவிலாஸ் என்ற ஒரு படம். அணு அணுவாக ரசித்து எழுதினேன். ஒரு நாட்டுக்கு எடுத்துக்காட்டாக ஒரு வீட்டை எடுத்துக் கொண்டேன். அந்த வீட்டின் முதலாளி ஒரு ஆங்கிலேயன். அவன் ஊரை விட்டுப் போகும்போது அந்த வீட்டை விற்றுவிட்டுப் போக நினைக்கிறான்.
ஆனால் அந்த வீட்டில் பல போர்ஷன்களில் வாழ்ந்த, பல இனத்தை, பல மொழியை, பல மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு நல்ல எண்ணம் உண்டாகிறது.
ஏன் நாம் பிரிய வேண்டும்? நாம் வாழ்ந்த இந்த வீட்டை விட்டுச் செல்ல வேண்டும். நாமே ஒன்று சேர்ந்து இந்த வீட்டை நமதாக்கிக் கொண்டு வாழ்ந்தால் என்ன? வெள்ளையனும் வெளியேறுகிறான்.
அவர்கள் ஒருமைப் பாட்டிற்கு என்னென்ன சோதனைகள் வந்தது? எப்படி அதற்கெல்லாம் மேலாக அவர்கள் மனித நேயம் உயர்ந்து அவர்களை ஒற்றுமையாள் வாழ வைத்தது என்பது தான் கதை.
இதைப் பாடப்புத்தகம் ஆக்காமல் எல்லோராலும் மகிழ்ச்சி கொள்ளும்படி எழுதினேன். என்னிடம் இந்தக் கதையை எடுப்பதற்கு வேண்டிய பணம் இல்லை. எல்லாப் பணம் படைத்தவர்களும் இந்தச் சோதனை வேண்டாம் என்று ஒதுங்கினர்.
ஒரு பெரிய காங்கிரஸ், தேசப்பற்று நிறைந்த தயாரிப்பாளர், தியாகி இளைஞனே உனக்கு ஏன் இந்த விஷப்பரீட்சை என்று அனுப்பி வைத்து விட்டார். நான் ஏமாந்து விட வில்லை. என் நண்பர் சரவணன் ஓகே சொன்னார்.
தைரியம் கொடுத்து பக்கத்தில் நின்றார். சினிபாரத் எடுத்த முதல் படம் இதுதான். என் மனைவியின் தயாரிப்பில் சொல்வதைத் திருந்தச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். சிவாஜி கணேசன் தான் அதற்கு சரியான ஆள்.
கே.ஆர்.விஜயா, மேஜர் சுந்தரராஜன், ராஜசுலோசனா, தேவிகா உள்பட பலர் நடித்தனர். எம்.எஸ்.வி. மியூசிக். என் கனவு நனவானது. இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஒரு சிறந்த படமாக அமைந்தது. படம் வெளியான ஆண்டு 1973.
இந்தப் படத்தில் வரும் இந்திய நாடு என் வீடு என்ற பாடலை டெல்லியிலும் பணம் கொடுக்காமல், என்னைக் கேட்காமல் ஒலிபரப்பினர். தமிழக டிவிகளில் எல்லாம் தேசிய நாள்களில் தவறாமல் ஒலித்தது.